பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நிப்பான் நாட்டுக் கவிதை


திரவனின் இளம் பொற்கிரணங்கள் முதல் முதலிலே நிப்பான் நாட்டினையே தழுவுகின்றன. அதனாலேயே அந்தாட்டிற்கு 'உதயச் சுடர் நாடு' எனப் பெயர் வந்தது. ஜப்பான் என மற்றவர்கள் அதை அழைத்தாலும் அந்நாட்டு மக்கள் அதற்கிட்ட பெயர் நிப்பான் என்பதே ஆகும்.

காலைக் கதிரவனின் ஒளி முதன் முதலில் அந்நாட்டிற் படிவது போலவே முன்னேற்ற ஒளியும் ஆசிய நாடுகளுக்குள் அங்கேயே முதலில் படிந்தது. மற்ற ஆசிய நாடுகள் எல்லாம் பெருமையும் நம்பிக்கையும் கொள்ளும்படியாக நிப்பான் முன் சென்றது. ஆனால் மேல் நாட்டு அதிகார வெறியிலே மயங்கி, ஆசிய தர்மத்தை மறந்து அது வீழ்ச்சியுற்றது. அதி வேகமாகச் சென்றவன் கால் இடறி விழுவது இயல்பு தான். ஆனால் அவன் அப்படியே விழுந்து கிடக்க மாட்டான். எழுந்து நின்று தன் குறைகளைக் களைந்து மறுபடியும் முன்செல்வான். நிப்பானும் அவ்வாறு செல்லும்; சென்றுகொண்டிருக்கிறது.

வீழ்ச்சியுற்ற தருணத்தில் அந்நாட்டின் பெருமைகளை யெல்லாம் நாம் மறந்து விடலாகாது. அதன் கலை, அதன் கவிதை, அதன் உள்ளம் இவற்றையெல்லாம் நாம் நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.

4