பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

காட்டு வழிதனிலே

டிற்கும், தாகத்திற்கும் அறிகுறியாக அங்குக் கருதப்படுகின்றது. புகழ' பெற்ற வீரர்களும், தலைவர்களும், மந்திரிகளும்; மன்னர்களும் கவி எழுதும் பழக்கத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள். மேய்ஜி எனும் பேரரசன் ஆயிரக் கணக்கான 'தங்கா'க்கள் இயற்றியுள்ளான். அவற்றில் பல சிறந்த கவிதைகளாக மதிக்கப்படுகின்றன.

கட்சோதி என்பான் திக்குத் தெரியாது பரந்து கிடக்கும், கடலிடத்தே மிதக்கும் தோணியைப் பார்த்துப் பாடுகின்றான்:

வழியில்லா வாரிதியில்
செல்லும் சிறு தோணிக்கும்
இளங் காற்றில் ஒரு நல்ல
வழிகாட்டி காண்கிறதே!

எல்லை யில்லா நீரில் மிதக்கும் தோணிக்கும் இளங்காற்று வழிகாட்டியாய் நின்று ஒரு குறிப்பிட்ட திசையில் அதைச் செலுத்துகின்றது, ஆனால், எல்லையில்லாக் காதலில் வாடும் அவன் தன் காதலியை அடைவதற்கு யாரும் இன்துணை புரியவில்லையே என்று உள்ளம் பொருமுகின்றான்.

ஒருவன் தான் முதுமை எய்துவதை நினைத்து வருந்திப் பாடுகிறான்:

இளவேனில் வந்தவுடன்
புள்ளினங்கள் ஆயிரமாய்ப் பாடி நிற்கும்;
எல்லாம் உருமாறி,
இளமை எய்தி எழில் காட்டும்;
என்னை மட்டும் முதுமை கவ்வும்.