பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நிப்பான் நாட்டுக் கவிதைகள்

59


நாட்டிலிருந்து அரச ஆணையால் விலக்கப்பட்ட யகாமொரி பாடுகிறான்:

அவனியிலே
விசுப்பினிலே
கடவுளரே இல்லையெனில்
காதலியைக் காணாது
என்னுயிர் தான் நீங்கிடுமே.

பண்டைக் காலத்திலே நிப்பான நாட்டில் திகழ்ந்த தெள்ளிய அறிவு வாய்ந்தவர்கள் தங்கள் மரணத்தறுவாயில் மனித வாழ்க்கையைப்பற்றிப் பொதுவாகவோ அல்லது தங்கள் சொந்த வாழ்க்கையைப் பற்றியோ தம் உள்ளக் கிடக்கையைக் கவியாக வெளியிடுவதுண்டு. இக்காலத்திலும் அப்பழக்கத்தை மேற்கொண்டுள்ளனர். அப்படிப்பாடும் கவிக்கு ஜிசி என்று பெயர்.

ஆடவரும் மகளிரும் குழுமியிருந்து ஏதாவது ஒரு பொருளைப் பற்றியோ, அழகிய காட்சியைப் பற்றியோ கவி எழுதுவதுண்டு. முழுமதி தன் தண்ணிய வெண் கதிர்களைப் பொழிந்து கொண்டிருந்த ஓரிரவில் அதைப் பற்றிப் பலர் கூடிக் கவிதை எழுதினார்கள். மிட்சூனியும் அவர்களில் ஒருவன். அவனுடைய கவிதை இது:

ஆஹா! பேரெழில் இரவு
தேய்ந்து கழிகின்றதே!
என் துன்பம் எழுதும் தரமாமோ?
இவ்விரவைத் தூங்கித் தொலைப்போரை
எண்ணிக்
கன வருத்தம் கொள்ளுகின்றேன்.