பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

காட்டு வழிதனிலே

வேண்டும். மனித சமூகத்தை இந்த வையகத்திலே நிலைபெற்று வாழச் செய்வதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது அதுதான் அடிகள் எடுத்துக் காட்டியுள்ள அன்பு வழி. அதை ஏற்றுக்கொள்ளாவிடில் மனிதனுக்கு உய்வில்லை; அவனுடைய இனம் அறிஞர் வெல்ஸ் கூறியபடி மறைந்தொழிந்து போக வேண்டியதுதான். இந்த எச்சரிக்கையைச் செய்ததே மகாத்மா காந்தி உலகத்திற்குப் புரிந்த மிகப் பெரிய பணியாகும். “அன்பும் அகிம்சையும் அவரையே காக்கவில்லை; அவை உலகத்தை எப்படிக் காக்கும்?” என்று சிலர் ஐயுறுகிறார்கள். அது சரியல்ல. அன்பும் அகிம்சையும் அவரைக் காக்கவில்லையென்று நினைப்பது தவறு. அவருடைய மறைவில் அடங்கியுள்ள தத்துவத்தை அறிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல. இயேசுநாதர் சிலுவையிலே உயிர் கொடுத்தார். எதற்காக? அவருடைய அன்புக் கொள்கை உயிர் பெறுவதற்காக, அவர் சிந்திய செங்குருதியிலே அது உரம் பெற்று வளர்ந்தோங்கியது. அதிலே புலனாகும் உட்கருத்தை அடிகளின் மறைவோடு ஒட்டிப் பார்க்கவேண்டும். அழிவுப் பாதையிலே உலகம் போகிற வேகத்தைப் பார்க்கும்போது அதற்குச் செய்ய வேண்டிய எச்சரிக்கை மிகப் பெரிதாகிவிட்டது; கவனத்தை ஒரே அடியாக இழுத்துச் சிந்தனையைத் தூண்டக் கூடியதாக இருக்கவேண்டியதாகிவிட்டது. அதற்குக் காந்தியடிகள் தமது இறுதித்தியாகத்தைச் செய்தார். நூற்று இருபத்தைந்தாண்டு வாழ்வேன் என்று கூறியவர், “உலகம் போகிற போக்கைப் பார்க்கிற