பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மதம் தேவையா?

77

களித்துள்ள அறிவை நல்வழியிலே பயன்படுத்தாதிருப்பது துரோகமல்லவா? சுவாமி விவேகானந்தர் ஓரிடத்திலே கூறுகிறார்: "தனது அறிவைப் பயன்படுத்தும் ஒருவன் இறைவனிடத்து நம்பிக்கையில்லாதிருப்பினும் அவனை இறைவன் மன்னித்து விடுவார்; ஆனால் அறிவைப் பயன்படுத்தாது குருட்டுத்தனமாக நம்புவனை அவர் மன்னிக்கமாட்டார் என்று நான் நம்புகிறேன்."

குறைபாடுகள் இருப்பதால் மதத்தையே ஒழித்துவிட வேண்டுமென்பதை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. மேலே படிந்திருக்கிற மாசையெல்லாம் விலக்கி விட்டுப் பார்த்தால் பெரிய உண்மைகளை மதம் காண்பிப்பதை அறியலாம். மனிதனுக்கு நிலைத்த மன அமைதியையும், இன்பத்தையும் அளிக்கக்கூடிய உண்மைகளை, அதில் காணலாம். சிறந்த ஞானிகள் தங்கள் பெருமுயற்சியினால் கண்டறிந்த மறை பொருள்களை நமக்கு மதத்தின் மூலம் அளித்திருக்கிறார்கள். உலகத்திலே ஓரிடத்திலல்ல, பல நாடுகளிலே மகான்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் மெய்ஞானத் தேட்டத்திலே அடைத்த அநுபவங்களை நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள். நடு நிலைமையோடு ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு அவை அனைத்தும் ஒன்றிற்கொன்று மாறுபட்டவை யல்லவென்று தெளிவாகும். அவற்றிலே வீண் வாதங்களுக்கோ உயர்வு தாழ்வுகளுக்கோ, அநீதிகளுக்கோ இடம் இல்லை. ஆதலால் அவற்றை அறிந்து நாம் பயனடைய வேண்டும்.