பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

காட்டு வழிதனிலே


மதம் மதம் என்று பேசிக்கொண்டிருப்பவர்களிடத்தே முயற்சி இல்லை யென்றும், அவர்கள் உலகத்தை வெறுத்துப் பேசிச் சமுதாய முன்னேற்றத்திற்குப் பாதகமாக இருக்கிறார்களென்றும், மத விஷயங்களிலே அதிகக் கவனம் செலுத்தியதனால் தான் இந்நாடு தாழ்வற்றதென்றும் சிலர் கூறுகிறார்கள். இக்குறைபாடுகளெல்லாம் மதத்தைச் சரியானபடி புரிந்து கொள்ளாததினால் ஏற்பட்டவையே ஒழிய மதத்தினால் உண்டானவையல்ல என்று நான் அழுத்தமாகக் கூற விரும்புகிறேன். மதத்தை உண்மையாகப் பின்பற்றுகிறவர்கள் தான் அருஞ்செயல்கள் ஆற்ற முடியும் என்பது எனது நம்பிக்கை. மதம் கடமையைப் புறக்கணிக்கச் சொல்லவில்லை; மதம் கடமையைப் பற்றற்ற நிலையிலிருந்து உயர்ந்த முறையில் செய்யும்படி போதிக்கின்றது.

மதத்தின் மூலம் உலகம் அனைத்தையும் ஒரே குடும்பமாகவும், எல்லா உயிர்களுக்கும் அன்பு செய்து வாழ்தலே உண்மையான இன்பத்திற்கு வழியெனவும் உணரலாகும். அவ்வுணர்ச்சியால் நாம் இன்று விரும்பும் எல்லா விதமான சமத்துவத்தையும் பெறலாம். ஒவ்வொரு ஆன்மாவும் இறைவனது அம்சமென்று மதம் போதிக்கின்றது. இந்த உண்மை நீதி நெறிகளை மட்டும் கடைப்பிடிப்பதால் வெளியாகாது. ஆகவே, மத உணர்ச்சியற்ற நாட்டிலே தனி மனிதனுக்கு அளிக்கவேண்டிய மரியாதை இராது. ஒவ்வொரு உயிரும் இறைவனின் அம்சம் என்பதை அறிந்து கொண்டால் பிறகு வேறுபாடுகளுக்கு இடமேது? ஆதலால் மதம் என்பது உயர்ந்த உண்மை-