பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாலைப் பொழுதினிலே

81


பஞ்சுப் பொதிகள் போலச் சில வெண் மேகங்களே மிதந்துகொண்டிருக்கின்றன. வானத்தின் நீலத்திலும் ஒரு தெளிவு காண்கிறது. கழுவி எடுத்த நீலம் என்று சொல்லும்படி நீல நிறம் அவ்வளவு ஆழ்ந்து அடுக்கின்மேல் அடுக்காக நீலத் திரையை வைத்தது போன்று காட்சியளிக்கிறது. அந்தி ஞாயிற்றின் பொற்கிரணங்களும் மழை நீராடிப் புத்தொளி பெற்றுவிட்டனபோலும். நிலப் பரப்பெல்லாம் அற்புதமான தெள்ளிய மஞ்சள் வெயில் படர்ந்திருக்கிறது.

எதிரே நீண்டு நிமிர்த்துள்ள நீலமணிக் குன்று, இந்தப் புதுக் கிரணங்களில் மூழ்கி அதன் மந்தமான வெதுவெதுப்பைத் துய்த்துக்கொண்டு படுத்திருக்கிறது. அதன் முகத்திற்கு மட்டும் வெயில் படாதவாறு ஒரு மேகப் புதர் எதிரே நின்று குடை பிடித்துக்கொண்டிருக்கிறது.

அந்த உள்ளத்திற்கினிய காட்சியைப் பார்க்கக் கொடுத்து வைத்தேன் நான். அதன் அழகிலே சிந்தையைச் செலுத்தி அப்படியே நடக்கலானேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் ஓர் ஊர் கிடையாது. சுற்றிலும் மேட்டு நிலம், சோளப் பயிர், துவரைச் செடி, இளம் வரகுக் கதிர் இவைதாம் புனல் குடைந்து புது வனப்புப் பெற்று மேலெழுந்த இளங் குமரிகள் போலப் புனங்களில் விளங்கின. நான் புனத்தினூடே புகுந்து மேற்கு நோக்கிக் கால் எடுத்து வைத்தேன்.

பெரும்புறா ஒன்று ஆழ்ந்த குரலில் தனது துணையைக் கூவியழைக்கத் தொடங்கி விட்டது.