பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. சிரிப்பும் கண்ணிரும்

திட்டமிட்டுத் தன்னைக் கற்பழிக்கத் துணிந்தவன் ஒரு சட்டக் கல்லூரி மாணவன்-இதை நினைக்க நினைக்க அருணாவுக்கு வியப்பாக மட்டுமில்லை; வேதனையாகவும் இருந்தது.

படிக்காதவர்கள் எதையும் திட்டமிடாமல் செய்தால், படித்தவர்கள் எதையும் திட்டமிட்டுத்தான் செய்வார்கள் போலிருக்கிறது! இல்லாவிட்டால் அவர்கள் அகப்பட்டுக் கொள்வதைப் போல இவர்களும் அல்லவா அகப்பட்டுக் கொள்வார்கள்?

அதிலும், இவன் சட்டம் படிப்பவன்; நாளைக்கு யோக்கியனை அயோக்கியன் என்றும், அயோக்கியனை யோக்கியன் என்றும் நிரூபிக்க வேண்டி என்னைப் போன்ற அபலைகளை ஏமாற்றுவதன் மூலம் இப்போதே தன்னைத் தயார் செய்துகொள்கிறான் போலிருக்கிறது!

இவன் மனிதனாம்!-தவறு செய்பவர்கள் எல்லாம் மனிதர்கள் என்று ஆகிவிட்டால், தவறு செய்யாதவர்கள் எல்லாம் தெய்வமா, என்ன?

இவர்கள் சொல்வதைப் பார்த்தால், யாரோ ஒரு ஞானி பட்டப்பகலில் விளக்கை ஏற்றிக்கொண்டு தேடினானாமே மனிதனை, அந்த ஞானி இப்போது இருந்தால் கண்ணை மூடிக் கொண்டு மனிதனைக் கண்டுபிடித்து விடலாம் போலிருக்கிறதே?

“சுந்தரம் என்ற பெயரைச் சுந்தரி என்று மாற்றி வைத்துக்கொண்டு இவன் அடிக்கடிக் கல்லூரிக்குப் போன் பண்ணும்போதே எனக்குச் சந்தேகந்தான். முன் அனுபவம் இல்லாமல் இந்த முன் யோசனை இவனுக்கு எப்படி உதித்தது என்று? அதில் சந்தேகம் ஒன்றுமில்லை என்று இப்போதல்லவா தெரிகிறது எனக்கு?