பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 109

கொடுமை, கொடுமை இனம் தெரிந்து கொள்ள முடியாத இந்த இளம் பிராயத்தில் நான் இந்த மனிதனைக் காதலித்ததும் கொடுமை; அந்தக் காதலின் விளைவாக இன்று நான் கண்ணிர் விடுவதும் கொடுமை!

போதும்; ஏழேழு பிறவிக்கும் இந்த அனுபவமே போதும்!

இந்தத் தீர்மானத்துக்கு வந்ததும் மணியிடம் ஒடோடியும் சென்று, ‘அண்ணா! என்னை மன்னித்து விடுங்கள், அண்ணா இனிமேல் நான் இந்த மாதிரி வேலைக்கே போக மாட்டேன்; என்னைப் பற்றி யாரிடமும் சொல்லி விடாதீர்கள், அண்ணா!’ என்று கேட்டுக்கொள்ள வேண்டும் போல் தோன்றிற்று அவளுக்கு; திரும்பினால்-அந்தப் பாவி இன்னும் அங்கேயே நின்றுகொண்டிருந்தால்?...

நின்று கொண்டிருந்தால் என்ன, அவன் முகத்தில் காறித் துப்பிவிட்டு மேலேப் போவது

நினைப்பதற்கு எல்லாம் சுலபமாய்த்தான் இருக்கிறது; ஆனால் நினைத்தபடி நடப்பதென்பது அவ்வளவு சுலபமாகவா இருக்கிறது?

அவனால் நான் கெடவில்லை என்பதும் , என்னால் அவன் கெடவில்லை என்பதும் என் மனதுக்கும் தெரியும்; அவன் மனதுக்கும் தெரியும். ஆனால் உலகத்தின் மனதுக்கு அதுத் தெரியுமா?-ஆத்திரத்தில் அவன் ஏதாவது தப்பும் தவறுமாகச் சொல்லி வைக்க, அதையும் நாலு பேர் நம்பி வைக்க, அதனால் போவது என் மானமாகவல்லவா இருக்கும்?-வேண்டாம்; இப்போது போய் மணி அண்ணனைப் பார்க்க வேண்டாம்!...

இந்த எண்ணத்துடன் அவள் முன்னால் வைத்த காலைப் பின்னால் வைத்தபோது, “ஏண்டி, இங்கே நின்று அழுது கொண்டிருக்கிறாய்?” என்று யாரோ கேட்பது அவள் காதில் விழுந்தது. திடுக்கிட்டுச் சுற்றுமுற்றும் பார்த்தாள்; பக்கத்தில் இருந்த புத்தகக் கடையில் ஏதோ ஒரு புத்தகத்தை வாங்கிக்