பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 115

கவிஞன். இருவர் கொடுத்த உருவங்களும் கற்பனைதான் என்றாலும், இன்று அவை வாழ்க்கையின் இரு பெரும் உண்மைகளாகிவிட்டன. ஒன்று, பரலோக வாழ்க்கைக்கு வழி காட்டுகிறது; இன்னொன்றோ இகலோக வாழ்க்கைக்கு வழி காட்டுகிறது; இரண்டையும் ஒன்றாகப் பார்த்து அனுபவிக்கக் கூடிய ஒரே இடம், மகாபலிபுரம்; அந்த மகாபலிபுரத்துக்குத்தான் நாளை நாம் போகப் போகிறோம்” என்றல்லவா அவன் சொன்னான்?

கடைசியில் நடந்தது என்ன?-கடவுளுக்குச் சிற்பி அங்கே உருவம் கொடுத்திருக்கிறானோ இல்லையோ, காதலுக்கு இங்கே உருவம் கொடுக்க ஆரம்பித்து விட்டான் இவன்-வெட்கக்கேடுதான், போ!

இவ்வாறு நினைத்தபடி, அவள் தன் தலையில் தானே தட்டிக் கொண்டபோது, ‘பாட்டுப் புத்தகம் வேண்டுமா அம்மா, பாட்டுப்புத்தகம் என்று கேட்டுக்கொண்டே பையன் ஒருவன் அந்தப் பக்கமாக வந்தான். ‘பாட்டுப் புத்தகம் வேண்டாம்; தலைவலி மருந்து ஏதாவது இருந்தால் கொடு’ என்றாள் அவள். அவன் அவளை ஒரு தினுசாகப் பார்த்துக் கொண்டே மேலே சென்றபோது, ‘பாட்டுப் புத்தகம், ஏ. பாட்டுப் புத்தகம்’ என்று.அவனுக்கே பாட்டுப் புத்தகம்’ என்ற பெயரை வைத்து அவனை அழைத்தான் மோகன், அவள் இருந்த பக்கமாகத் திரும்பி.

அவ்வளவுதான்; ‘இனி இங்கே இருந்தால் ஆபத்து’ என்று துணிந்து கீழே இறங்கி வந்தபோது, இன்னொரு எதிர்பாராத அதிர்ச்சி அவளுக்கு அங்கே காத்துக்கொண்டு இருந்தது; அந்த அதிர்ச்சி சுந்தர் உருவிலே வந்து அங்கே நின்றுகொண்டு இருந்தது

இவன் யாருக்காக இங்கே வந்திருக்கிறான்? தனக்காக வந்திருக்கிறானோ? தனக்காக வந்திருக்கிறான் என்றால், தான் இந்தத் தியேட்டருக்குள் நுழைந்ததைக் கூடப் பார்த்துவிட்டு வந்திருக்கிறானோ?