பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 237

கொண்டே கதவைச் சாத்திவிட்டு, உள்ளே போவதற்குத் தயாரானாள் அவள், எங்கே அவன் தன்னைத் தொடர்ந்து உள்ளே வந்து விடுவானோ, என்னமோ என்று பயந்து!

அது தெரிந்தும் ‘மோகன் இல்லையா வீட்டில் ‘ என்று கேட்டுக்கொண்டே அவளைத் தொடர்ந்து உள்ளே ஓர் அடி எடுத்து வைத்தான் மணி, தெரியாதவன் போல.

அவனைத் தடுத்து நிறுத்த அவளுக்கு வாயும் வரவில்லை; மனமும் வரவில்லை. அதற்காகத் தன் கணவர் தனக்கு இட்டக் கட்டளையை அவனிடம் தெரிவிக்கவும் அவள் விரும்பவில்லை. இருந்தாலும், நிலைமையை எப்படியாவது சமாளிக்க வேண்டுமே என்று எண்ணி, அவன் கேட்டதற்கு நேரிடையாகப் பதில் சொல்லாமல், ‘அவன் வந்ததும் ஒட்டலுக்கு வந்து உன்னைப் பார்க்கச் சொல்கிறேன்; நீ போ!’ என்றாள் சுற்றி வளைத்து

அதற்கு மேல் அவளைச் சோதிக்க விரும்பாமல், ‘'வேண்டாம்; இனிமேல் அவன் அந்த ஒட்டலுக்கு வர வேண்டாம். அதைச் சொல்லத்தான் வந்தேன். நான்’ என்று சொல்லிவிட்டு, மணி திரும்பினான்.

அவன் தலை மறைந்ததும் உள்ளேயிருந்த மோகன் வெளியே வந்து சிரித்தான்; சிரித்துவிட்டுச் சொன்னான்:

‘'நீ எதைச் சொல்லப் பயந்தாயோ, அதை அவன் எவ்வளவு தைரியமாகச் சொன்னான் பார்த்தாயா, அம்மா?” ‘சொல்வது எதுவாயிருந்தாலும் அதைச் சொல்லத் தைரியம் மட்டும் இருந்தால் போதாது; நோக்கம் வேறு நல்ல நோக்கமாயிருக்க வேண்டும். அது அவன் சொல்வதில் இருக்கிறது; நாம் சொல்வதில் இல்லை. அதனால்தான் நாம் பயப்படுகிறோம்; அவன் தைரியமாயிருக்கிறான்’ என்றாள் அன்னபூரணி.

‘அதை நீயாவது புரிந்து கொண்டிருக்கிறாய்? அதுவே போதுமம்மா எனக்கு, அதுவே போதும்!” என்றான் அவன்.