பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 காதலும்கல்யாணமும்

வாழத் தூண்டுபவர்களும் இருக்கிறார்கள் என்ற உண்மை இப்போதுதான் தெரிந்தது எனக்கு என்று சொன்னாயே, அந்த உண்மை யாரால் தெரிந்தது உனக்கு?’ என்று கேட்டுக்கொண்டே வந்தார் பரந்தாமன்.

அதுதான் சமயமென்று, ‘உங்களால்தான்’ என்றாள் அருணா, கொஞ்சம்கூடத் தயங்காமல்.

‘அப்படியானால் உன்னை நம்பி நான் உன்னை இங் கேயே விட்டுவிட்டு ஆபீசுக்குப் போகலாமா?’ என்றார் அவர்.

‘தாராளமாக!’ என்றாள் அவள். ‘மிக்க மகிழ்ச்சி; நான் வருகிறேன். சாயந்திரம் நீ விரும்பினால் உன்னைக் கொண்டு போய் உன்னுடைய வீட்டில் விட்டு விடுகிறேன்’ என்று சொல்லிவிட்டுச் சென்றார் அவர்.

அந்தக் கடைசி வார்த்தையைச் சொல்லாமல் போகக் கூடாதோ? என்று நினைத்தாள் அவள்1

இந்தப் பெண்கள் - நினைத்தவுடன் தங்கள் உயிரை மட்டுமல்ல; உள்ளத்தைக்கூட எவ்வளவு எளிதில் இழக்கத் தயாராகிவிடுகிறார்கள்

‘இந்த அருணா!- இவள் என்னைச் சந்தித்து இன்னும் இருபத்து நாலு மணி நேரம்கூடச் சரியாக ஆகவில்லை; அதற்குள் இவள் என்னைக் காதலிக்க ஆரம்பித்துவிட்டாள் அந்தக் காதலுக்கு இவள் படித்த கதைகள் மட்டுமா துணையாக நிற்கின்றன, பார்த்த சினிமாக்களும் துணையாக நிற்கின்றன. இல்லாவிட்டால் நேற்றிரவு அவள் பேசிய அந்த வசனம், அவள் செய்த அந்தச் சேட்டை இரண்டுமே அவ்வளவு செயற்கையாகவா இருக்கும்?

என்னமோ, போகட்டும் - காட்டில் வளர்ந்த கொடியாயிருந்தாலும் கிடைத்தக் கொம்பைப் பற்றிப் படரத் துடிக்கிறது என்று நினைக்கலாம்; இந்த வீட்டில் வளர்ந்த கொடி ஏன் இப்படித் துடிக்கிறது?