பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 87

‘அப்படிச் சொல்லுடி, அப்படிச் சொல்லு! அதுதானே வேண்டும் என்கிறேன், நான்!” என்றாள் மீனாட்சியம்மாள், அவளை உற்சாகத்துடன் தட்டிக் கொடுத்து.

“ஆம், பாமா பாரத நாட்டுப் பெண் குலம் பிறருக்காகச் சாவதை மட்டும் பெருமையாகக் கொண்டால் போதாது; வாழ்வதையும் பெருமையாகக் கொள்ளவேண்டும். என்ன, தெரிந்ததா?” என்றார் சொக்கலிங்கனார்.

அவள் வாயைத் திறக்கவில்லை; தெரிந்தது’ என்பதற்கு அடையாளமாகத் தலையை மட்டும் ஆட்டினாள். ‘இதோ பார், மீனாட்சி இவள் எடுத்ததற்கெல்லாம் ‘அது என்னமோ எனக்குத் தெரியாது, அது என்னமோ எனக்குத் தெரியாது’ என்று சொல்கிறாளே, அதிலும் அர்த்தமில்லாமற் போகவில்லை. பார்க்கப் போனால், காதலே அர்த்தமில்லாதது தானே?-உதாரணத்துக்கு என்னையும் உன்னையும்தான் எடுத்துக்கொள்ளேன்? -என்னை நீ ஏன் காதலித்தாய், உனக்குத் தெரியாது; உன்னை நான் ஏன் காதலித்தேன், எனக்குத் தெரியாது. அதே மாதிரிதான் இவளும் அவனைக் காதலித்திருப்பாள்; அவனும் இவளைக் காதலித்திருப்பான்-ஏன் பாமா, அப்படித்தானே?”

அதற்கும் அவள் வாயைத் திறக்கவில்லை; “ஆமாம்” என்பதற்கு அடையாளமாகத் தலையை மட்டும் ஆட்டினாள், குனிந்த தலையை நிமிர்த்தாமல்.

‘இருக்கலாம்; காதலுக்கு எந்தவிதமான அர்த்தமும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எனக்கும் உங்களுக்கும் இருந்த தைரியம் இவர்களுக்கு இல்லையே?-எனக்கு இருந்ததுபோல் பாமாவுக்கு ஒரு தந்தை இருந்து, அந்தத் தந்தையிடம் ‘உங்கள் பெண்ணை நான் விரும்புகிறேன், அவளும் என்னை விரும்புகிறாள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’ என்று உங்களைப் போல் வந்து கேட்கவேண்டியிருந்தால் அவன் என்ன செய்திருப்பான்? இல்லை, இவள்தான் என்ன செய்திருப்பாள்?"