பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21


காந்தியாரும் தவறாமல் செல்லுவார். இவருடைய கூச்சமானது நீங்குவதற்குப் பல இளம் பெண்களுடன் இவரை அறிமுகம் செய்து வைத்து உரையாடும்படி செய்வார். அவர்களில் ஒரு குமரியைக் குறிப்பிடவேண்டும். அவள் அம் மூதாட்டியுடன் வாழ்ந்து வந்தாள். அடிக்கடி காந்தியாரும் அப்பெண்ணும் தனிமையில் விடப்பட்டனர். முதலில் காந்தியாருக்கு இது சிறிது தொல்லையாகப் பட்டது. பெண்களோடு பேசுவதே ஒரு தனிக்கலை. நகைச்சுவையோடு புகழ்ச்சியையும் அழகையும் கூட்டி அவர்கள் உள்ளத்தை மகிழ்விக்க வேண்டும். ஆனால் காந்தியாருக்கு அவ்வாறு பேச வரவில்லை. அம் மூதாட்டியார் அவ்வகையில் இவருக்குப் பயிற்சி யளித்தார். இவரும் கற்றுக் கொண்டார். கொஞ்ச நாட்கள் சென்றதும் ஞாயிற்றுக்கிழமை எப்போது வரும் என்று ஆவலோடு எதிர்பார்க்கத் தொடங்கினார். அவ்விள மங்கையோடு உரையாடுவதில் இன்பங் கண்டார்.

அம்மூதாட்டி நாள் தோறும் தம் வலையை விசாலமாக்கிக் கொண்டு வந்தார். காந்தியாரும் அம் மங்கையும் அடிக்கடி சந்திப்பதில் அம் மூதாட்டியார் அதிக அக்கறை காட்டினார். உடனே காந்தியடிகளுக்கு ஐயம் தோன்றலாயிற்று. தமக்கும் அப்பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்க அவ்வம்மையார் முயற்சி செய்கிறார் என்பதை உணர்ந்தார். இனிமேல் உண்மையை மூடி மறைத்துப் பயனில்லை என்று உணர்ந்தார். உடனே அம்மூதாட்டி யாருக்குப் பின்வருமாறு ஒரு கடிதம் எழுதினார்.

“அன்புடையீர்! நாம் முதன் முதலில் சந்தித்த நாளிலிருந்து தாங்கள் என்னிடம் அளவுகடந்த அன்புகாட்டிவந்திருக்கிறீர்கள். என்னைத் தங்கள் மகனாகவே எண்ணி என் பொருட்டுக் கவலை எடுத்துக்கொண்டு வந்திருக்கிறீர்கள். எனக்கு மணம் செய்துவைக்க வேண்டுமென்று விரும்பி