பக்கம்:கானகத்தின் குரல்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 கானகத்தின் குரல் 'அப்படியா பக் அப்படி இழுக்க முடியாதென்று நான் ஆயிரம் டாலர் பந்தயம் கட்டுகிறேன். இதோ பணம்' என்று மத்தேயுஸன் எல்லோரும் கேட்கும்படியாய் நிதானமாக அழுத்தம்திருத்தமாகச் சொன்னான்; அவ்வாறு சொல்லிக்கொண்டே ஒரு சிறிய தங்கத்தூள் மூட்டையை எடுத்து முன்னால் போட்டான். யாரும் பேசவில்லை. தார்ன்டன் சொன்னது வெறும் கதைதான். வாயில் வந்தவாறு சற்றும் யோசியாமல் அவன் பேசிவிட்டான். ஆயிரம் ராத்தல் சுமை உடைய வண்டியை இடம்விட்டு நகர்த்தி பக் இழுக்குமா என்று அவனுக்குத் தெரியாது. ஆயிரம் ராத்தல்கள்! அந்தப் பாரத்தை நினைக்கும்போதே அவனுக்குத் திகில் உண்டாயிற்று. பக்கின் வல்லமையில் அவனுக்கு முழு நம்பிக்கை உண்டு. அவ்வளவு பெரிய சுமையையும் அது நகர்த்தி இழுக்கும் என்று அவன் பல தடவை நினைத்ததும் உண்டு. ஆனால், அவ்வளவு பெரிய பளுவை இழுக்கவேண்டிய நிலைமை ஏற்படும் என்று அவன் எதிர்பார்த்ததில்லை. பத்துப் பன்னிரெண்டுபேர் மெளனமாக நின்று அவனை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தனர். மேலும், அவனிடத்திலே ஆயிரம் டாலர்கள் கிடையாது; ஹான்ஸ், பீட் ஆகிய இருவரிடமும் கிடையாது. 'ஐம்பது ராத்தல் நிறைவுள்ள மாவுமூட்டைகள் இருபது என் சறுக்கு வண்டியிலே இருக்கின்றன. வண்டி வெளியே நிற்கிறது. அதனால் அதைப்பற்றி இடைஞ்சல் இல்லை என்று மத்தேயுஸன் உடைத்துப்பேசினான். தார்ன்டன் பதில் கூறவில்லை. அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சிந்தனாசக்தியை இழந்து அதை மறுபடியும் பெறுவதற்கு முயல்கிறவன்போல அவன் ஒவ்வொருவருடைய முகத்தையும் பார்த்தான். மாஸ்டோடன் ராஜாவாகிய ஜிம் ஒப்ரியன் என்பவன் தார்ன்டனுக்குப் பழமையான தோழன். அவன் அங்கே நிற்பதைத் தார்ன்டன் கண்டான். அவனைப் பார்த்த உடனே தார்ன்டனுக்கு என்ன செய்வதென்று உதயமாயிற்று. “எனக்கு ஆயிரம் டாலர் கடன் கொடுப்பாயா?" என்று அவனிடம் மெதுவாகக் கேட்டான். "கட்டாயம் கொடுப்பேன். உன்னுடைய நாய் இந்தக் காரியத்தை செய்ய முடியும் என்ற நம்பிக்கை அதிகம் இல்லாவிட்டாலும் உனக்காகக் கொடுக்கிறேன்" என்று சொல்லிவிட்டு, மத்தேயுஸன் வைத்த மூட்டைக்குப் பக்கத்திலே ஒப்ரியனும் ஒரு பருத்த மூட்டையை வைத்தான். இந்தப் பந்தயத்தைப் பார்க்க மதுபானக்கடையிலிருந்த அனைவரும் வீதிக்கு விரைந்தார்கள். பல கடைக்காரர்களும்,