பக்கம்:கானகத்தின் குரல்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 கானகத்தின் குரல் வேகத்தை விட்டுவிடாமல் பக் வண்டி இழுத்தது. வண்டியும் ஒழுங்காகச் செல்லலாயிற்று. மூச்சுபேச்சில்லாமல் அங்குக் கூடியிருந்த மக்கள் இப்பொழுது தாராளமாக மூச்சுவிடலாயினர். வண்டியைத் தொடர்ந்து போய்க்கொண்டே தார்ன்டன் பக்குக்கு உற்சாகமளிக்கும் வகையில் ஏதேதோ கூவினான். குறிப்பிட்ட இடத்தை நோக்கி வண்டி செல்லச்செல்ல உற்சாகமான கோஷங்கள் எழுந்தன. நூறு கஜ துரத்தையும் வண்டி கடந்ததும் ஒரே மூச்சாக எல்லோரும் ஆரவாரம்செய்தனர். ஒவ்வொருவனும் ஆனந்தக் கூத்தாடினான். மத்தேயுஸனும் அந்த உற்சாகத்தில் பங்கு கொண்டான். தொப்பிகள் வானிலே பறந்தன. ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் குலுக்கினார்கள். யார் கையைக் குலுக்குவதென்றுகூட யாரும் யோசிக்கவில்லை. அத்தனை உற்சாகம். எங்குப் பார்த்தாலும் ஒரே மகிழ்ச்சி ஆரவாரம்; அர்த்தங்கண்டுகொள்ள முடியாத பேச்சொலி. தார்ன்டன் பக்கின் அருகிலே அமர்ந்தான்; அதன் தலைமேல் தன் தலையை வைத்தான்; அப்படியே அசைந்தாடினான். அவன் பக்கைச் செல்லமாகத் திட்டுவதையும் அருகிலிருந்தவர்கள் கேட்டார்கள். 'ஸ்கூக்கும் பென்ச் ராஜா மறுபடியும் விலை பேசத் தொடங்கினான். 'ஆயிரம் டாலர்-ஐயா ஆயிரம் டாலர் இல்லை, ஆயிரத்து இருநூறு” என்றான் அவன். தார்ன்டன் எழுந்துநின்றான்; அவன் கண்களில் கண்ணிர் நிறைந்து தாரைதாரையாக வழிந்தது. 'பக்கை விற்க முடியாது; நீ வந்த வழியைப்பார்க்கலாம் என்று அவன் சொன்னான். பக் அவன் கையை வாயில் கவ்விப்பிடித்தது. தார்ன்டன் பக்கோடு சேர்ந்து முன்னும் பின்னும் அசைந்தாடினான். கூடியிருந்தவர்கள் இடம்விட்டு விலகினர். தார்ன்டனுக்கும் பக்குக்கும் உள்ள அன்பிற்கு இடையிலே குறுக்கிட அவர்கள் என்ன மதியற்றவர்களா?