பக்கம்:கானகத்தின் குரல்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜாக் லண்டன் கதை சொல்லுவதில் மிக வல்லவர். இதுதான் அவரைப்பற்றிய முக்கியமாக கூற வேண்டிய விஷயம். அவர் கதைகளைச் சிறந்த முறையில் சொல்வதற்காகவே பிறந்தவர். கவனத்தை ஈர்க்கும்படியாகக் கதை சொல்லும் திறமையும், கதைப்போக்கில் தடை ஏற்படாமல், தெளிவாக வர்ணிக்கும் திறனும், நாடகபாணியில் நிகழ்சிகளை அமைக்கும் சக்தியும் சேர்ந்து ஜாக் லண்டனின் பெரும்பாலான நூல்களுக்கு தனிப்பட்ட கவர்ச்சியை அளிக்கின்றன. ஜாக் லண்டன் இறந்து முப்பத்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. அவர் எழுதிய ஐம்பது நூல்களில் பெரும்பாலானவற்றை மக்கள் மறந்துவிட்டார்கள். திறனாய்வாளர்களுள் காலமே சிறந்தது. அது துரங்காமல் வேலை செய்து மதிப்பிடுகின்றது. காலப்போக்கில் பல நூல்களை மக்கள் மறந்துவிட்டாலும், கானகத்தின் குரல், கடல், ஓநாய், மார்ட்டின் ஈடன்போன்ற நூல்களும், இருபது முப்பது சிறுகதைகளும் என்றும் அவர்கள் நினைவில் இருக்கும். இருபதாண்டுகளில் ஐந்தாறு சிறந்த நூல்களை எழுதியிருந்தால் அதுவே எந்த எழுத்தாளனுக்கும் சிறந்த வெற்றியாகும். மேலே குறிப்பிட்ட நூல்களெல்லாம் ஜாக் லண்டனுடைய வாழ்க்கையின் முற்பகுதியான சுமார் பத்தாண்டுகளில் எழுதப்பட்டவை. அவற்றில் காணப்படும் திறமையும், சக்தியும், உற்சாகமும், ஸ்நார்க் பிரயாணத்திற்குப் பின்பு எழுதப்பட்ட நூல்களில் குறைந்து காணப்படுகின்றன. மனோபாவனைத் திறமையாலும் கதையும் கருத்துக்களும் தங்கு தடையின்றிச் செல்லும்படி அமைக்கும் ஆற்றலாலும் கதையை கற்பனை செய்வதற்கு வேண்டிய இயற்கைத் திறமையாலும் ஜாக் லண்டனுக்கு இக்கால அமெரிக்க இலக்கியத்தில் ஒரு முக்கியமான ஸ்தானம் கிடைத்துள்ளது. -ப்ராங்க் ஐதன் மாட்