பக்கம்:கானகத்தின் குரல்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 கானகத்தின் குரல் முந்திரிப்பழம் பயிர் செய்வோர் சங்கத்தின் கூட்டமொன்று ஒரு நாள் மாலையில் நடந்தது. அதற்கு நீதிபதி போயிருந்தார். பையன்கள் உடற்பயிற்சிச் சங்கம் ஒன்றை நிறுவுவதிலே ஈடுபட்டிருந்தார்கள். மானுவெலின் துரோகச் சிந்தனைக்கு நல்ல சமயம் கிடைத்தது. பக்கை அழைத்துக்கொண்டு அவன் பழமரக்கூட்டத்தின் வழியாகப் போவதை யாரும் பார்க்கவில்லை. கொஞ்ச தூரம் சுற்றிவிட்டு வருவதற்காகவே புறப்பட்டிருப்பதாக பக் எண்ணிக் கொண்டிருந்தது. காலேஜ் பாரக் என்ற பெயருடைய சிறிய ரயில்நிலையம் உண்டு. கொடி காட்டினால் தான் அங்கே ரயில் நிற்கும். அவ்விடத்திலே ஒரு மனிதன் மானுவெலைத் தனியாகச் சந்தித்து என்னவோ பேசினான்; அவனுக்குப் பணமும் கொடுத்தான். 'சரக்கை நல்லாக் கட்டிக்கொடு' என்று அந்த மனிதன் உறுமினான். ஒரு தடிப்பான கயிற்றைக் கொண்டு பக்கின் கழுத்துப் பட்டைக்கடியிலே கழுத்தைச் சுற்றி மானுவெல் இரட்டையாகக் கட்டினான். 'இந்தக் கயிற்றை இறுக்கினால் மூச்சுதிணறிப்போகும்' என்றான் மானுவெல். 'அது சரி என்று மறுபடியும் உறுமினான் அந்த மனிதன். கழுத்திலே கயிற்றைக் கட்டியதைப் பக் ஆட்சேபிக்காமல் அமைதியாக ஏற்றுக்கொண்டது. இது மாதிரி முன்பு யாரும் கட்டியதில்லை. இருந்தாலும் பழகிய மனிதர்களிடத்திலே அதற்கு நம்பிக்கை உண்டு. ஆனால் மானுவெல் கயிற்றை அந்தப் புதுமனிதன் கையில் கொடுத்தவுடனே பக் பயங்கரமாக உறுமலாயிற்று. தனக்கு அந்தச் செய்கை பிடிக்கவில்லை என்பதைக் குறிப்பாக அப்படிக் காட்டியது. அந்தக் குறிப்பே போதும் என்பது அதனுடைய எண்ணம். ஆனால், கயிறு தனது கழுத்தை நெரிக்கத் தொடங்கியதை அது எதிர்பார்க்கவில்லை. அதற்கு மூச்சு திணறியது. புதுமனிதன் மேல் பக் கோபத்தோடு பாய்ந்தது. அதன் கழுத்தைப்பிடித்து அவன் அழுத்தினான். அதே சமயத்தில் திடீரென்று அதை மல்லாந்து விழுமாறு தள்ளிவிட்டான். உடனே கயிறு மேலும் குரூரமாகக் கழுத்தை இறுக்கத் தொடங்கியது. பக் ஆத்திரத்தோடு திமிறிப்பார்த்தது; முடியவில்ல; அதன் நாக்கு வெளியே தொங்கிவிட்டது. மூச்சுவிட முடியாமல் நெஞ்சு துடித்தது. அதன் வாழ்க்கையிலெ ஒரு காலத்திலும் யாரும் இப்படி கொடுமையாக நடத்தியதில்லை. இப்பொழுது அதன் உள்ளத்தில் குமுறிக் கொண்டிருக்கும் கோபத்தைப் போல் பெரிய கோபம் அதற்கு எந்தக் காலத்திலும் வந்ததில்லை. ஆனால் அதன் பலமெல்லாம் ஒடுங்கிவிட்டது. கண்கள் சோர்ந்தன. ரயிலை அங்கே நிறுத்தியதும்,