பக்கம்:கானகத்தின் குரல்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜாக் லண்டன் , 23 மானுவெலும் அப்புதுமனிதனும் மூட்டை முடிச்சு வண்டியிலே அதைத் தூக்கிப் போட்டதும் பக்குக்குத் தெரியவேயில்லை. அது நினைவிழந்து கிடந்தது. அதற்கு நினைவு வந்தபோது அதன் நாக்கிலே நோவெடுப்பதையும், ஏதோ ஒரு வாகனத்திலே ஆடிக் குலுங்கிச் சென்று கொண்டிருப்பதையும் மெதுவாக உணர்ந்தது. ரயில் எஞ்சின் வீறிட்டுக் கத்தியபோதுதான் அதற்கு நிலைமை புலனாயிற்று. நீதிபதியுடன் அது பல தடவை ரயிலில் போயிருந்தது. அதற்கு மூட்டை முடிச்சுப் பெட்டியின் அனுபவம் முன்பே உண்டு. பக் கண்களைத் திறந்தது. பலவந்தமாகக் கடத்திச் செல்லப்படுகின்ற ஒரு அரசனுக்கு வருகின்ற கட்டுக்கடங்காத கோபம் அதன் கண்களில் கொழுந்துவிட்டது. புதுமனிதன் அதன் கழுத்தைப்பிடித்து அழுத்தப்பாய்ந்தான். ஆனால் பக் முந்திக் கொண்டது. அவன் கையைக் கவ்விப் பிடித்துக் கடித்தது. மறுபடியும் மூச்சுதிணறி நினைவு தப்பிவிழும்வரையில் அது அவன் கையை விடவே இல்லை. கழுத்திலுள்ள கயிறு மீண்டும் அதன் மூச்சைத் திணற வைத்துவிட்டது. அந்தப் பெட்டியிலுள்ள மூட்டை முடிச்சுகளைக் கண்காணிக்க ஒருவனிருந்தான். அங்கே ஏற்பட்ட போராட்டம் அவன் கவனத்தை இழுத்தது. புதுமனிதன் காயமுற்ற தன் கையை மறைத்துக் கொண்டு, 'இதற்கு அடிக்கடி வலிப்பு வரும். அதனாலே ஸான்பிரான்சிஸ் கோவுக்கு முதலாளி கொண்டுபோகச் சொன்னார். அங்கே ஒரு டாக்டர் இதற்கு மருந்து கொடுப்பாராம்' என்று அவனிடம் விளக்கம் கூறினான். அந்த இராப்பிரயாணத்தைப் பற்றி அவன் அடுத்த நாள் ஸான் பிரான்சிஸ்கோவில் ஒர் உணவுவிடுதியின் பின்புறத்திலிருந்த கொட்டகைக்குள் உட்கார்ந்துகொண்டு பிரமாதமாகப் பேசிக் கொண்டான். 'இத்தனை சிரமத்துக்கும் ஐம்பது டாலர்தானா? கையிலே ரொக்கமாக ஆயிரங்கொடுத்தாலும் இனிமேல் இதைச் செய்ய மாட்டேன்' என்று அவன் முணுமுணுத்தான். அவன் கையில் கட்டியிருந்த கைக்குட்டை ரத்தம் தோய்ந்து கிடந்தது. அவனுடைய காலுடையின் வலது பக்கத்திலே ஒரே கிழிசல். 'அந்தப் பயலுக்கு எத்தனை கிடைத்தது?" என்று விடுதிக்காரன் கேட்டான். - 'நூறு டாலர். அதிலெ கொஞ்சம்கூடக் குறைக்க முடியவில்லை” விடுதிக்காரன் கணக்குபோடத் தொடங்கினான்.