பக்கம்:கானகத்தின் குரல்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. பூர்வீக விலங்குனர்ச்சி பூர்வீகநிலையிலேயுள்ள விலங்குனர்ச்சி பக்கினிடத்திலே மிக வலிமையோடிருந்தது. பனிப்பாதையிலே சறுக்குவண்டியிழுக்கும் கடுமையான வாழ்க்கை ஏற்பட்டதால் அந்த உணர்ச்சி மேலும் மேலும் வளர்ந்தது. ஆனால் அவ்வளர்ச்சி மறைமுகமாகவே நடைபெற்றது. அதனிடத்திலே புதிதாகத் தோன்றியுள்ள தந்திர உணர்ச்சியால் அதற்கு வாழ்க்கையிலே ஒரு சமநிலையும், கட்டுப்பாடும் பிறந்தன. புதிய வாழ்க்கைக்குத் தன்னைப் பக்குவப்படுத்திக்கொண்டிருந்த பக் சண்டைக்குப்போவதை அறவே விலக்கியது; தானாகவே சண்டை வந்து சேர்ந்தாலும் கூடுமான வரையில் அதை எப்படியாவது தவிர்க்கவே முயலும், அதன் போக்கிலே ஒரு நிதானம் தனிப்பண்பாக அமையலாயிற்று. அவசரப்பட்டு அது எதையும் செய்துவிடாது. அதற்கும் ஸ்பிட்ஸுக்குமிடையிலே வளர்ந்திருந்த கடுமையான வெறுப்பினாற்கூட அது பொறுமையிழந்து குற்றமான செயலொன்றும் புரியவில்லை. தலைமைப்பதவியிலே தனக்குப் போட்டியாக, பக் தோன்றியுள்ளதென்பதை யூகித்துக்கொண்டு, ஸ்பிட்ஸ் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கோபத்தோடு தனது பல்லைக் காட்டத் தவறாது. வேண்டுமென்றே அது பக்குக்குத் தொல்லை கொடுக்க முயலும்; எப்படியாவது அதனுடன் சண்டையிட வேண்டுமென்று பார்க்கும். அப்படிச் சண்டை உண்டாகுமானால் அவைகளுள் ஒன்று சாவது திச்சயம்.