பக்கம்:கானகத்தின் குரல்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 கானகத்தின் குரல் சண்டையின் காரணத்தை அவன் தெரிந்து கொண்டான். 'அந்தத் திருட்டுப்பயலுக்கு நல்லாக்கொடு, நல்லாக் கொடு', என்று அவன் பக்கைப் பார்த்துக் கூவினான். ஸ்பிட்ஸும் பலிவாங்கத் தயாராக இருந்தது. அடங்காக் கோபத்தோடு அது கத்திற்று. முன்னும்பின்னும் அது வட்டமிட்டுப் பக்கின்மேல் பாய ஒரு நல்ல சந்தர்ப்பதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. பக்கும் சண்டையில் மிகுந்த ஆர்வங்காட்டிற்று. அதுவும் எச்சரிக்கையோடு முன்னும் பின்னும் வட்டமிட்டுத் தனக்கு அனுகூலமான சமயத்திற்காகக் காத்திருந்தது. அந்த வேளையில்தான் என்றும் நிகழாத அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. முதன்மை ஸ்தானத்திற்காக அந்த இரு நாய்களிடையே ஏற்பட்ட அந்தப் போராட்டம் அதனால் தடைப்பட்டுவிட்டது. பல நாட்களுக்குப் பிறகுதான் அச்சண்டை மறுபடியும் நடந்தது. திடீரென்று பெரோல்ட் கோபத்தோடு கூவினான்; எலும்புந்தோலுமாகக் கிடந்த ஒரு நாயின் முதுகிலே தடியடி விழுகின்ற சத்தமும் எழுந்தது. அடி பொறுக்காமல் அந்த நாய் வீறிட்டது. மறுகணத்திலே முகாமில் ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. பசியால் வயிறொட்டிப்போன எழுபது எண்பது எஸ்கிமோ நாய்கள் முகாமிலே புகுந்துவிட்டன. சிவப்பு இந்தியர் வாழும் ஏதோ ஒர் ஊரிலிருந்த அந்த நாய்கள் அந்த முகாமிருப்பதை மோப்பம் பிடித்துக் கண்டுகொண்டன. பக்கும் ஸ்பிட்ஸும் சண்டையிட்டுக்கொண்டிருக்கும் சமயத்தில் அவை மெதுவாக முகாமுக்குள் வந்துவிட்டன. பெரோல்ட்டும் பிரான்சுவாவும் பெரிய தடிகளை எடுத்துக்கொண்டு அவற்றினிடையே பாய்ந்தபோது, அவை பல்லைக் காட்டிக்கொண்டு சண்டையிட முனைந்தது. உணவின் வாசனை அவைகளுக்கு ஒரு வெறியையே உண்டாக்கி விட்டது. உணவுப்பெட்டிக்குள் ஒரு நாய் தலையை விட்டுக்கொண்டிருப்பதைப் பெரோல்ட் கவனித்தான். அதன் விலா எலும்பின்மேல் விழுமாறு அவன் தடியால் ஓங்கி அடித்தான். உணவுப்பெட்டி கவிழ்ந்து விழுந்தது. அந்தக் கணத்திலேயே ரொட்டியையும் பன்றிஇறைச்சியையும் நாடி ஒன்றின்மேல் ஒன்று மோதிக்கொண்டு பத்து இருபது நாய்கள் பாய்ந்தன. தடியடியை அவைகள் பொருட்படுத்தவே இல்லை. சரமாரியாக விழும் அடியால் அவைகள் ஊளையிட்டுக் கத்தினாலும், உணவுப்பொருள்களில் ஒரு துண்டு கூட விடாமல் விழுங்கும் வரையில் அந்த இடத்தைவிட்டு அவை நகரவில்லை.