பக்கம்:கானகத்தின் குரல்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 கானகத்தின் குரல் தைரியம் பிறந்தது. வட் டமிட்டு வளைத்துக்கொண்டிருந்த அந்தக் கொடிய நாய்களினிடையே பாய்ந்து அது பனிக்கட்டியின்மேல் வேகமாக ஓடலாயிற்று. அதைத் தொடர்ந்து பக்கும் டப்பும் ஓடின. மற்ற வண்டிநாய்களும் அவற்றைப் பின்தொடர்ந்தன. அவற்றோடு பாய்ந்து செல்ல பக் தயாராகும் சமயத்தில் தன்னைக் கீழே வீழ்த்தும் நோக்கத்தோடு ஸ்பிட்ஸ் தன்மேல் பாய வருவதை அது கடைக்கண்ணால் பார்த்துவிட்டது. அந்த எஸ்கிமோ நாய்களின் மத்தியில் கீழே விழுந்தால் அதன் கதி அதோகதிதான். அதனால் அது தயாராக நின்று ஸ்பிட்ஸின் பாய்ச்சலால் ஏற்பட்ட அதிர்ச்சியைச் சமாளித்துக் கொண்டது. பிறகு அது மற்ற வண்டிநாய்களைப் போல ஏரியின்மேல் படிந்திருந்த பனிக்கட்டிகளின் வழியாக ஒட்டமெடுத்தது. வெகு நேரத்திற்குப் பிறகு வண்டிநாய்கள் ஒன்பதும் கானகத்திலே ஒன்றுசேர்ந்து அங்கேயே தங்க இடம் தேடின. அப்பொழுது அவற்றைத் துரத்திக்கொண்டு பகைநாய்கள் வரவில்லை யென்றாலும் அவற்றின் நிலை பரிதாபமாக இருந்தது. நான்கைந்து இடங்களில் காயமுறாமல் ஒரு நாயும் தப்பவில்லை. சில நாய்களுக்குப் பலத்த காயம். டப்பின் பின்னங்கால் ஒன்றில் ஆழமான காயம், டையேவில் வந்து சேர்ந்த டாலி என்ற எஸ்கிமோ நாயின் தொண்டை கிழிந்துபோயிற்று. ஜோ ஒரு கண்ணை இழந்துவிட்டது. நல்ல சுபாவமுடைய பில்லியன் காதை ஒரு பகை நாய் மென்று பல துண்டுகளாகக் கிழித்துவிட்டது. அதனால் இரவு முழுவதும் பில்லி தேம்பிக்கொண்டும் கத்திக் கொண்டுமிருந்தது. பொழுது விடிந்ததும் அந்த நாய்கள் நொண்டி நொண்டி முகாமுக்குத் திரும்பின. பகைநாய்கள் போய்விட்டன. பெரோல்ட்டும், பிரான்சுவாவும் கோபத்தில் உட்கார்ந்திருந்தார்கள். உணவுப் பொருள்களில் பாதி போய்விட்டது. சறுக்குவண்டி வார்களையும், கித்தான் உறைகளையும் எஸ்கிமோ நாய்கள் பல இடங்களில் கடித்துத் தின்றுவிட்டன. தின்பதற்கு முடியும் என்று தோன்றிய எந்தப் பொருளும் அவைகளிடமிருந்து தப்பவில்லை. பனிமான் தோலால் செய்த பெரோல்ட்டின் பாதரட்சைகளையும் கடித்து தின்றுவிட்டன. வண்டியின் திராஸ்வார்களையும் கடித்துத் தின்றுவிட்டன. அதைப் பற்றி விசனத்தோடு சிந்தனை செய்து கொண்டிருந்த பிரான்சுவா காயங்களோடு திரும்பிய நாய்களைக் கவனிக்கலானான். 'அடடா! உங்களுக்கெல்லாம் வெறி பிடித்தாலும் பிடித்துவிடும். பெரோல்ட், அவை எல்லாம் வெறிநாய்களோ என்னவோ நீ என்ன நினைக்கிறாய்?"