பக்கம்:கானகத்தின் குரல்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 கானகத்தின் குரல் செங்குருதியை வாயில் சுவைக்க வேண்டுமென்று பக் எல்லா நாய்களுக்கும் முன்னால் தாவித் தாவிச்சென்றது. ஒரு பரமானந்தம் வாழ்க்கையின் சிகரமாக ஏதோ ஒருவேளையில் ஏற்படுகின்றது. அதற்குமேல் வாழ்க்கை உயர்வடைய முடியாது. துடிதுடித்து, வகையில் தன்னை மறந்திருக்கும் நிலையிலேயே அந்தப் பரவசம் பிறக்கின்றது. திரைச்சீலையிலே உருவாகிக் கொண்டிருக்கும் உணர்ச்சியால் பொங்கும் ஒவியத்திலே, உள்ளத்தைப் பறிகொடுத்திருக்கும் கலைஞனுக்குத் தன்னை மறந்த நிலையிலே அந்தக் கழிப்பேருவகை வாய்க்கின்றது. படுகளத்தில் போர்வெறியோடு நிற்கும் வீரனுக்கு அது கிட்டுகின்றது. நிலவொளியிலே பஞ்சாய்ப் பறக்கும் பனிமுயலைத் துரத்திக் கொண்டு எல்லா நாய்களுக்கும் முன்னால் ஓநாய்போலக் குரல் கொடுத்துப் பாய்கின்ற பக்குக்கும் அந்தப் பரவச உவகை பிறந்தது. காலக்கருவில் உருவான விலங்குணர்ச்சியை, தனக்கு முன் தன் இனத்தில் தோன்றிய கொடிய தன்மையை பக் ஆழம்பார்த்தது. அந்த உணர்ச்சி மேலெழுவதை அறிந்தது. உயிர்வேகம் அதற்குள்ளே கொந்தளித்தெழுந்தது. மேலே தோன்றும் நட்சத்திரங்களுக்கும் கீழே விரிந்துகிடக்கும் அசைவற்ற சடப்பொருளான பனிப்பரப்புக்கும் இடையில் ஆர்வத்தோடு பாய்ந்து செல்லும் பக்கினிடத்திலே உறுதியான தசைநார்களின் துடிப்பும், வலிமையெல்லாம் பெற்றுள்ள வாழ்வின் எக்களிப்பும் வெளிப்பட்டன. ஆனால் கிளர்ச்சி மிகுந்த காலத்திலும் திட்டமிட்டுக் காரியம் செய்யும் இயல்புகொண்ட ஸ்பிட்ஸ் மற்ற நாய்களை விட்டுவிட்டு வேறொரு குறுக்குவழியில் பாய்ந்து சென்றது. ஒருநீண்ட வளைவைச் சுற்றிக்கொண்டு முயலும், அதன் பின்னால் பக்கும் வருவதற்குள், ஸ்பிட்ஸ் குறுக்குவழியில் முன்னால் சென்று மடக்கிக் கொண்டது. பக்குக்கு இந்தக் குறுக்குவழி தெரியாது. வெண்குறளி போலச்செல்லும் முயலுக்கு முன்னால் தோன்றி அதன் மேல் பாய்வதற்குத் தயாராக நிற்கும் மற்றொரு பெரிய குறளிபோல ஸ்பிட்ஸ் நிற்பதை அது கண்டது. முயலால் முன்னேறிப்போகவும் முடியவில்லை. பின்னால் திரும்பி ஓடவும் முடியவில்லை. ஸ்பிட்ஸின் வெண்மையான பற்கள் அதன் முதுகிலே பாய்ந்தபோது அது அடிபட்ட மனிதனைப்போல வீறிட்டுக் கத்திற்று. சாவின் பிடியிலே அகப்பட்ட அந்தப் பிராணியின் கீச்சுக் குரலைக் கேட்டதும் பக்கைத் தொடர்ந்து அதன் பின் ஓடிவந்த நாய்களெல்லாம் கொடுங்களிப்போடு குரல் கொடுத்தன.