பக்கம்:கானகத்தின் குரல்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜாக் லண்டன் 57 கால்கள் வளைந்திருந்தன. பூனைபோல எளிதில் தாவும் சக்தி அவனிடத்திலே இருந்தது. கண்ணுக்குத் தோன்றும் பொருள்களிடத்திலும் தோன்றாத பொருள்களிடத்திலும் எப்பொழுதும் அச்சம் கொண்டிருப்பவனைப்போல அவனிடத்திலே எச்சரிக்கையும் துடிப்பும் காணப்பட்டன. வேறு சில சமயங்களில் அந்தச் சடை மனிதன் தீக்கு முன்னால் அமர்ந்து தனது தலையைக் கால்களுக்கிடையிலே வைத்துக் கொண்டு உறங்கினான். அந்தச் சமயங்களிலெல்லாம் மழைநீரைக் கைகளின் வழியாகக் கீழே வழியச் செய்கின்றவன்போல அவன் தனது முழங்கைகளை முழங்கால்களின் மீது ஊன்றிக் கைகளைத் தலைக்கு மேல் கோத்துக்கொண்டிருப்பான். கொழுந்துவிட்டு எரியும் நெருப்புக்கு அப்பால் சூழ்ந்திருக்கும் இருளிலே ஜோடிஜோடியாகச் சுடர்விடும் கண்களோடு பெரிய கொடிய விலங்குகள் இரையை நாடிக் காத்திருப்பதையும் பக் பார்த்தது. புதர்களுக்கிடையே அவைகள் பாய்வதால் சடசடவென்று ஏற்படும் சப்தமும், அவைகள் இரவில் எழுப்பும் ஒசைகளும் பக்கின் காதுகளில் ஒலித்தன. யூக்கான் ஆற்றின் கரையிலே தீக்கு முன்னால் படுத்துக்கொண்டு தீயைப்பார்த்து மெதுவாகக் கண்களைச் சிமிட்டியவாறே இவ்வாறு கனவு காணும் வேளையில் தோன்றிய தொல் உலகக் காட்சிகளும், ஒலிகளும் சேர்ந்து பக்கின் உடம்பிலுள்ள உரோமத்தைச் சிலிர்க்க வைக்கும். பக் மெதுவாக சிணுங்கும், அல்லது உறுமும், அதைக் கேட்டுச் சமையற்காரன், 'டேய், பக், தூங்காதே எழுந்திரு” என்று கத்துவான். உடனே அந்தப் பழைய உலகம் மறைந்துவிடும்; உண்மையாக அன்றுள்ள உலகம் கண் முன்பு தோன்றும் பக் எழுந்துநின்று கொட்டாவி விடும். தூங்கி எழுந்ததுபோல உடம்பை நெளித்து மூளி முறிக்கும். தபால்மூட்டைகளை எடுத்துச் செல்லும் அந்தப் பிரயாணம் மிகச் சிரமமானதாய் இருந்தது. நாய்களெல்லாம் அலுத்துப் போயின. டாஸன் சேர்ந்தபோது அவைகள் இளைத்து மோசமான நிலையில் இருந்தன. பத்து நாள் அல்லது ஒரு வார ஒய்வாவது அவைகளுக்கு அவசியம் வேண்டும். ஆனால், வெளியூர்களுக்குச் செல்லும் கடித மூட்டைகளைச் சுமந்து கொண்டு இரண்டே நாட்களில் அவைகள் திரும்பிப் புறப்பட வேண்டியதாயிற்று. நாய்கள் களைத்திருந்தன. வண்டியைச் செலுத்துபவர்களும் முணுமுணுத்துக் கொண்டிருந் தார்கள். நிலைமையை இன்னும் மோசமாக்குவதற்குத் தினமும் உறைபனி விழலாயிற்று. அதனால் பாதை கெட்டுவிட்டது. வண்டிக்கு முன்னால் ஒடுபவர்களுக்கு வேலை அதிகமாயிற்று.