பக்கம்:கானகத்தின் குரல்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக் கானகத்தின் குரல் தொடங்கினான். அவர்களிடம் அதிலே அவன் வெற்றியடையாமற் போகவே நாய்களுக்கு அதைத் தன் தடியின்மூலம் கற்பிக்கலானான். வழியிலே ஒரிடத்திற்கு வந்து சேருவதற்குள் நாய்களுக்கு வேண்டிய உணவு முழுவதும் தீர்ந்துவிட்டது. பல்லில்லாத கிழவன் ஒருவன் குதிரைத்தோலைப் பனிக்கட்டியிலிட்டு உணவாகப் பதப்படுத்தி வைத்திருந்தான், ஹாலின் இடுப்பிலே வேட்டைக்கத்தியோடு துணையாகக் காட்சியளித்த சுழல்துப்பாக்கியைக் கொடுத்தால் குதிரைத்தோலில் கொஞ்சம் கொடுப்பதாகக் கூறினான். வயிறு வற்றிக்கிடந்த குதிரைகளின் தோலை எடுத்து அவன் ஆறு மாதங்களுக்கு முன்னால் பக்குவப்படுத்தியிருந்தான். அது பேருக்கு உணவாகுமே அல்லாமல் சரியான உணவாகாது. துத்தநாகம் பூசிய இரும்புத்துண்டுபோல அந்தத்தோல் தோன்றியது. நாய்கள் அதனுடன் மல்லுக்கட்டி எப்படியோ மென்று விழுங்கின. ஆனால் அது வயிற்றுக்குள்ளே போய் வார்களாகவும், சிறுசிறு உரோமக் குஞ்சங்கள் போலவும் பிரிந்து சீரணிக்க முடியாமற் போனதோடு வயிற்றுவலியையும் உண்டாக்கிற்று. இத்தனை அவஸ்தைகளையும் தாங்கிக்கொண்டு, ஏதோ கனவுலகத்திலே போவதுபோல பக் மற்ற நாய்களுக்கு முன்னால் தள்ளாடித் தள்ளாடிச் சென்று கொண்டிருந்தது; இழுக்க முடிந்தபோது இழுத்தது; இழுக்க முடியாதபோது நிலத்தில் விழுந்து கிடந்தது. சாட்டையடியும், தடியடியுந்தான் அதை மீண்டும் எழச் செய்தன. உரோமம் அடர்ந்த அதன் உடம்பிலிருந்த பளபளப்பும் கட்டும் மறைந்தன. உரோமம் சடையாகத் தொங்கியது. ஹாலின் தடியடிபட்டுக் காயமான இடங்களில் ரத்தம் ஒழுகி உலர்ந்துகிடந்தது. தசைநார்கள் நலிந்து முடிச்சு விழுந்த கயிறுகள் போலாகிவிட்டன. உடம்பிலிருந்த சதைப்பற்றும் மறைந்தொழிந்தது. தோல் சுருங்கிப் பல இடங்களில் மடிந்திருந்தது. உடம்பிலுள்ள எலும்புகளெல்லாம் சுருங்கிய தோலுக்கடியில் நன்றாகத் தெரிந்தன. பார்ப்பவர்கள் உள்ளமே உடைந்து போகும்படியாக பக் காட்சியளித்தது; ஆனால் அதன் உள்ளம் மட்டும் உடைந்துபோகவில்லை. அதன் உள்ளத்தின் திண்மையைச் சிவப்பு மேலங்கிக்காரனே கண்டிக்கிறான். பக்கின் நிலைமையைப் போலவே மற்ற நாய்களின் நிலைமையுமிருந்தது. அவைகள் ஊர்ந்துசெல்லும் எலும்புக் கூடுகளாக மாறிவிட்டன. பக்கையும் சேர்த்து ஏழு நாய்கள் இருந்தன. பெருந்துன்பம் உழன்ற அவைகள் சாட்டைவீச்சுக்கும் தடியடிக்கும் தடித்துப் போயின. எங்கே அடி விழுந்து வலிக்கிற மாதிரி அவைகளுக்கு மந்தமான உணர்ச்சிதான் ஏற்பட்டது. பார்ப்பனவும்