பக்கம்:காரும் தேரும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை

'அமுத சுரபி' என்னும் இலக்கியத் திங்கள் இதழில் தொடர்ந்து பல இலக்கியக் கட்டுரைகளை எழுதி வந்தேன். பல்வேறு காலங்களில் எழுந்த தமிழ் இலக்கியங்களின் இயல்புகளையும் சிறப்புகளையும் விளக்கும் முறையில் எழுதிய கட்டுரைகளில் பல இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

பண்பாட்டை உணர்த்தவில்லையானால் ஒர் இலக்கியம் உயர்ந்த இலக்கியமாகக் கருதப்படமாட்டாது என்ப்ர். அக்கருத்தை விளக்க எழுந்ததே 'இலக்கியம் உணர்த்தும் பண்பாடு' என்னும் கட்டுரை. யவனர்கள் தமிழ் நாட்டோடு கொண்ட தொடர்பு பழந்தமிழ மக்களின் நாகரிக மேம்பாட்டினையும், வணிகச் சிறப்பினையும் வகையுற உணர்த்துவதாகும். நூலின் தலைப்பாக அமையும் 'காரும் தேரும்’ என்னும் கட்டுரை முல்லை மலரும் கார்காலத்தின் மாலையிலே தலைவன் வரவு நோக்கி வருந்தி நிற்கும் தலைவியின் வருத்தத்தினையும் வீடு நோக்கி விரைந்து வரும் தலைவனின் உணர்ச்சியினையும் ஒருங்கே புலப்படுத்துவதாகும். மணிமேகலைக் காப்பியம் உணர்த்தும் அறக் கொள்கைகளை 'மணிமேகலை உணர்த்தும் அறம்' அறிவிக்கின்றது. "இலக்கியத்தில் தமிழ்நாடு" என்னும் சொல் இலக்கியங்களில் எங்கெங்கு எடுத்தாளப் பெற்றிருக்கின்றது என்பதனை விளக்க எழுந்த கட்டுரையாகும். பழந்தமிழர் அருளைப் பற்றியும் பொருளைப் பற்றியும் கொண்டிருந்த எண்ணத்தினை எடுத்து மொழிவது 'அருளும் பொருளும்' என்னும் கட்டுரை. தொண்டை நாட்டின் பெருமையைப் பேசுவது 'தொண்டை நாட்டின் பெருமை’ என்னும் கட்டுரை. 'தமிழ்க் காப்பியங்கள்' என்னும் கட்டுரை தமிழ்க் காப்பியங்களையும், 'கல்வியும் கருத்தும்' என்னும் கட்டுரை கல்வி பற்றிய சிந்தனைகளையும், வைணவ சமயத்தின் பழமை’ என்னும் கட்டுரை வைணவத்திற்கும் தமிழிற்கும் உள்ள தொடர்பினையும், 'குளிர் துங்கும் குற்றாலம்' என்னும் இறுதிக் கட்டுரை குற்றாலத்தைப் பற்றிய எண்ணங்களையும் தெரிவிப்பனவாகும்.

இந் நூலினை இலக்கியப் பசி மிகுந்த தமிழுலகம் ஏற்று ஆதரிக்கும் என நம்புகிறேன்.

சி. பா
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காரும்_தேரும்.pdf/5&oldid=955307" இலிருந்து மீள்விக்கப்பட்டது