பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/546

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



91. கங்கை பெருகினால்?


காரைக்கால் அம்மையார் தொடர்ந்து கேள்வி மேல் கேள்வியை எழப்புகிறார். இறைவனுடைய வாயையும் கண்டத்தையும் நோக்கிக் கேள்வி கேட்ட அவர் இப்போது தம் பார்வையை உயர்த்திப் பார்க்கிறார். சிவபெருமானுடைய சடாபாரத்தில் அவர் பார்வை நிலைக்கிறது.

இறைவன் திருமுடியில் சடை இருக்கிறது. அங்கே அவன் அரவை அணிந்திருக்கிறான்; பிறையைப் புனைந்திருக்கிறான்; கங்கையையும் வைத்திருக்கிறான்.

கங்கை மிக்க ஆரவாரத்தோடும், ‘என்னைத் தாங்குவார் யார்?’ என்ற மிடுக்கோடும் வந்தது. அதை இறைவன் சடையில் ஏற்றான். அங்கே கங்கை இருக்கிறது. கங்கையில் அலைகள் இருக்கும். அது சடையில் அடங்கி நில்லாமல் மீண்டும் அலைகளை வீசிப் பெருகினால் என்ன ஆகும்? — இப்படி எண்ணிப் பார்க்கிறார் அம்மையார்.

“குழந்தாய், அந்த நாயைப் பிடிக்காதே; அது சாதுவாக இருந்தாலும் திடீரென்று அது உன்னைக் கடித்தாலும் கடிக்கும். அப்போது என்ன செய்வாய்?”' என்று தன் குழந்தையிடம் கூறும் தாயைப் போலச் சொல்சிறார் அம்மையார். இறைவனைத் திருக்கைலையில் சென்று தரிசித்தபோது, "அப்பா!" என்று கூறிக்கொண்டே அவனை அணுகினார். இப்போதும், "எம் தந்தையே!" என்று விளித்து, “தான் கேட்கும் கேள்விக்கு விடையைச் சொல்” என்று தொடங்குசிறார்.

கூறு எமக்கு ஈது, எந்தாய்!