பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/550

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92. புறம் கூறுவது ஏன்?


காரைக்காலம்மையார் தசையெல்லாம் கழன்று என்பே வடிவாய்ப் பேயாக நின்றார். தம்மை மணந்த கணவன், ‘இவர் தெய்வம்; இவரோடு வாழ்வது தகாது’ என்று மதுரை சென்று வேறு ஒரு பெண்ணை மணந்து வாழ்த்தான். அவனிடம் உறவினர்கள் அம்மையாரை அழைத்துச் சென்றபோது அவன் அவரை வணங்கினான். “இவர் தெய்வம் என்று அஞ்சி இங்கே வந்தேன்” என்றான். பிறகு அவனுக்குப் பயன்படாத இந்த அழகு வேண்டாமென்று எண்ண, இறைவனை வேண்டிப் பேயுருவம் கொண்டார் அம்மையார்.

அவர் அவ்வாறு ஆனதைக் கண்டு சிலர் பழி கூறினார்கள். 'இவள் வாழ்க்கையைய இழந்தாள்" என்று தம்முள் பேசிக்கொண்டார்கள்; புறம் கூறினார்கள்.

இந்தச் செய்தி அம்மையாருக்குத் தெரிந்தது. ‘பாவம்! அறியாமையையுடைய மக்கள்’ என்று எண்ணிச் சிரித்துக் கொண்டார். “நமக்குக் கிடைத்திருக்கும் பேரின்ப வாழ்வைப் பற்றி அறிந்து கொள்ளாமல் இப்படிப் புறம் கூறுகிறார்களே! இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும் நமக்குக் கிடைத்த பேறு வேறு யாருக்குக் கிடைக்கும்?” என்று பெருமிதம் கொண்டார்.

தன்னுடைய சிரத்தில் அலைகள் நிரம்பிய கங்கையை அணிந்தவன் சிவபெருமான். அந்தச் செஞ்சடை கங்கைக்குப் புகலிடம் அளித்திருக்கிறது. அவனுடைய சடையும் சிவந்தது. திருவடியும் சிவந்தது. அந்தச் சேவடிக்கே ஆளாகி அதன் கீழேயிருந்து என்றும் பணிந்து வாழும் வாழ்வு அம்மையாருக்குக் கிடைத்தது.