பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/552

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

542

தெரிமினோ.

"இப்படி ஆனதால் உமக்கு என்ன கிடைத்தது?" என்று கேட்கிறார்கள் உலகத்தினர்.

"இம்மையில் புகழும் அம்மையில் அருளின்பமும் கிடைப்பதுதான் வாழ்க்கையின் பயன். இம்மையில் இறைவன் அடியை அகலாத இன்பம் கிடைத்தது. அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு ஏதும் ஐயுறவில்லை. மற்ற எது இருந்தாலும் இறைவன் அருள் இல்லாவிட்டால் என்ன பயன்! அந்த அருள் கிடைத்தால் கிடைக்காதது என்ன? இம்மைக்கும் அம்மைக்கும் எவை கிடைக்க வேண்டுமோ அவை யாவும் எமக்குக் கிடைத்திருக்கின்றன. உடம்புக்கு இன்பம் கிடைப்பதுதானா உண்மையான நிலை? உயிருக்கே இன்பம் கிடைத்திருக்கிறது. இம்மையிலேயே அது கிடைத்துவிட்டது. அவன் அருள் பெற்றதனால் எமக்கு எல்லாம் அமைந்திருக்கின்றன. குறைவிலா நிறைவாகிய அப்பனுடைய பேரரருளில் முக்குளிக்கும் எமக்கு ஏது குறை? நாம் எல்லாம் அமைந்தோம்.".

இம்மைக்கும் அம்மைக்கும்
எல்லாம் அமைந்தோமே.

“இப்படி இருக்க, எம்மைப் பற்றிப் புறத்தே பழித்துப் பேசுவது ஏன்? எம்மைக் குறை கூறுபவர்கள் இம்மையிலும் குறையில்லாமல் வாழ்வதில்லை. அம்மையைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதே இல்லை. அவ்வாறு உள்ள தம் நிலையை எண்ணிப்பாராமல் யாம் என்னவோ வாழ்க்கையை வீணடித்துவிட்டதாகப் பேசிக் கொள்கிறார்களே! இது என்ன பேதைமை?”

எம்மைப் புறம்உரைப்பது ஏன்?

"நேரே எம்மிடம் சொன்னால் அவர்களுக்கு எம்முடைய மனநிறைவை எடுத்து விளக்கியிருப்போமே. எதற்காகப் புறம்பே நின்று பேசுகிறார்கள்?"