பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/555

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

545

களுக்கும் மேலாக மன்னர் மன்னனாகிய சக்ரவர்த்தி இருப்பது போல அந்தத் தலைவன் இருக்கிறான். பிரம்ம விஷணு ருத்திரர்கள் படைத்தல், காத்தல், அழித்தல் என்று மூன்று தொழில்களை இயற்றும் தலைவர்கள். அவர்களே மும்முதல் என்று சொல்வார்கள். அந்த அந்தத் தொழிலை இயற்றும் அளவில் அவர்கள் முதல்வர்களாக இருந்தாலும் எல்லாருக்கும் மேலாக முதல்வனாக இருப்பவன் ஒருவன்தான்.

ஒரு பெரிய காரியாலயத்தில் ஒவ்வொரு பிரிவிற்கும் ஒவ்வொரு தலைவர் இருப்பார். காரியாலயம் முழுமைக்கும் ஒரு தனித் தலைவர் இருப்பார். அது போன்ற நிலை இது.

அது மட்டும் அன்று. கீழே உள்ள தலைவர்கள் தங்கள் ஆட்சிக்காலம் முடிந்தவுடன் போய்விடுவார்கள். வேறு தலைவர்கள் வருவார்கள்.

“நூறு கோடி பிரமர்கள் நுங்கினார்” என்று பாடுவார் அப்பர்.

கீழுள்ள தலைவர்கள் இப்படிக் காலத்துக் காலம் மாறிக் கொண்டிருந்தாலும் மேலுள்ள தனித் தலைவனாகிய சிவபெருமான் என்றும் மாறாமல் நிலைத்து நிற்பவன். தான் ஒருவனே தனித் தலைவனாக என்றும் நிலையாக இருப்பவன் அவன்.

ஏகமாய் நின்றானும்.

அவனுடைய கல்யாண குணங்கள் பல. அவனுடைய அருள் வெளிப்படும்போது அந்தக் குணங்கள் சமயத்துக்கு ஏற்ப வெளிப்படும். அவனுக்கே தன்னுடைய தன்மை முழுவதும் தெரியாதாம். அடியார்கள் கண்டு கண்டு வியந்து பாராட்டும்போது அவற்றை நாம் தெரிந்து கொள்கிறோம்.

“உன்னை நீதானும் உணராதாய்”

என்று சகாதேவன் கண்ணனைப் பார்த்துச் சொல்வதாகப் பாரதத்தில் வருகிறது. அதுபோல அம்மையார்,

நா.—35