பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/558

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94. அன்பாய் விரும்பு


காரைக்கால் அம்மையார் தம் நெஞ்சைப் பார்த்துப் பேசுகிறார். அந்த நெஞ்சு நம்முடைய போன்றதன்று. 'எந்தையார்க்கு ஆட்செய்யப் பெற்ற இதுகொலோ, சிந்தையார்க்கு உள்ளசெருக்கு' என்று அந்த நெஞ்சு பெருமிதத்தோடு இருப்பதை முன்பு (79) சொல்லியிருக்கிறார். இறைவனை உணர்ந்த நெஞ்சு அது. இறைவனுடைய சேவடிக்கே ஆளாய் வேறு ஒன்றையும் விரும்பாத நெஞ்சு அது.

நம்முடைய மனத்துக்கு நாம் அடிமையாக இருக்கிறோம். அதனால் அது நம்மைக் காடு மேடெல்லாம் இழுத்துக் கொண்டு திரிகிறது. பேய்க்கு அடிமைப்பட்டால் அது நாம் விரும்பாத செயல்களையெல்லாம் செய்யச் சொல்லும். அதை நாம் அடிமைப்படுத்திவிட்டால் நாம் விரும்பிய காரியங்களையெல்லாம் அது செய்யும். இந்த மனமும் ஒரு பேய்தான். அதை அடக்கி நம் வசப்படுத்திவிட்டால் அது நம் விருப்பம் போல நடக்கும். இறைவனேயே நினைக்கும்படி நாம் ஏவினால் அப்படியே செய்யும். அது வன்னெஞ்சாகவோ புன்னெஞ்சாகவோ இராமல் நன்னெஞ்சாகவே மாறிவிடும்.

இத்தகைய நன்னெஞ்சைப் படைத்தவர் அம்மையார். அதைத் தட்டிக் கொடுத்து அதைப் பின்னும் நன்றாக இறைவனிடம் ஈடுபடும்படி ஏவுகிறார் அவர். அதை, நன்னெஞ்சே!” என்று விளித்துச் சொல்லப் புகுகிறார்.

நன்னெஞ்சே!

இறைவனிடம் இடையறாத அன்பு செய்ய வேண்டும் என்பதைச் சொல்ல வருகறார். யாவர்க்கும் மேலான அவனை