பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/569

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

559

இறைவன் திருவுள்ளத்தை உணர முடிந்தால் யாரிடம் அவன் அதிக அன்பு பாவிக்கிறான் என்று சொல்ல முடியும். அவன் திருவுள்ளத்தை அறிந்து கொள்ளும் ஆற்றல் யாருக்கு இருக்கிறது?

ஆகவே, அவனையே கேட்டு விடுவோம் என்று துணிந்து, இந்த வினாவை விடுக்கிறார் அம்மையார்.

அவள் ஓர் குலமங்கை,
பாகத்து அகலாள்;
இவள் ஓர் சலமகளும்
ஈதே;— தவளநீறு
என்புஅணிவீர், என்றும்
பிரிந்துஅறியீர்; ஈங்குஇவருள்
அன்புஅணியார் சொல்லுமின், இங்குஆர்?

"வெண்மையான திருநீற்றையும் எலும்பையும் அணியும், பெருமானே! அங்கே இருக்கும் ஒப்பற்ற அவள் நல்ல குலத்தில் தோன்றிய மங்கையாகிய பார்வதி; இங்கே இருக்கும் இந்த நீர் வடிவத்திலுள்ள கங்கா தேவியும் இந்தத் திருமுடியில் இருக்கிறாள். இந்த இரண்டு தேவிமாரையும் நீர் என்றும் பிரிந்தறிய மாட்டீர். இவ்வாறு உம்மோடு ஒட்டி நிற்கும் இந்த இரு தேவியர்களுக்குள் உம்முடைய அன்புக்கு அணிமையை உடைய நெருக்கமானவர் யார்? இதை யானாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை. நீரே சொல்லும்.”

[அவள் என்றது பார்வதியை. பாகத்து அகலாள் என்பதனால் அச்சொல் அம்பிகையைக் குறித்தது என்பது தெரியவரும். இவள் என்றது கங்கையை. ஓர் என்றது எண்ணக் குறித்து நின்றது. உலகத்தவரும் காண ஆறாக ஓடுதலின் இவள் என்று அணிமைச் சுட்டினால் குறித்தார்.