பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/577

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

567

தில் இருப்பதுதான் பொருத்தமாக இருக்கும். இதை அறிந்து அதை அதன் வெம்மை சிறிதும் குறையாமல் உறைப்போடு இருக்கும்படி பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்கிறானோ? அந்த இடம் எது? ஒ! இறைவன் அதனைத் தன் திருக்கரத்தில் வைத்திருக்கிறான். தீயை ஏந்தி ஆடும் பெருமான் அல்லவா அவன்?

முன்காலத்தில் தீக்குச்சி இல்லை. அதனால் நெருப்பைப் பாதுகாத்து வைப்பார்கள். ஓமச் சட்டியில் பொதிந்து வைத்திருப்பார்கள். அந்தணர்கள் நாள்தோறும் அக்கினி காரியம் செய்வார்கள். அதனால் அக்கினியைப் பாதுகாத்து வைப்பார்கள். பிறருக்கு அதிலிருந்து நெருப்பை உதவுவார்கள். அக்கினி காரியம் செய்து வரும் அந்தணன் இறந்து போனால் அந்த அக்கினியைக் கொண்டே அவன் உடலை எரிப்பார்கள்.

பிறருக்கு நெருப்பைக் கொடுப்பது ஒர் உபகாரம்.

அவ்வாறு அக்கினியைப் பாதுகாத்து வைத்துப் பயன்படுத்துவது பழங்கால வழக்கம். அவ்வண்ணமே இறைவன் பிரளய காலத்தில் பயன்படுத்துவதற்காகச் செந்தீ அழலைத் தன் திருக்கரத்தில் ஏந்திப் பாதுகாப்பாக வைத்திருக்கிறானோ?

அன்றேல் உறைப்போடும்
உன்கைக் கொண்டாயோ?

உலகத்தில் ஐந்து பூதங்களும் இருக்கின்றன. அவை வெவ்வேறு அளவில் கலந்து பிரபஞ்சமாக உருவெடுக்கின்றன.

“நிலந்தீ நீர்வளி வெளியென ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம்”

என்று தொல்காப்பியம் கூறுகிறது. அவ்வாறு மறைத்து வைத்திருக்கிறானா அழலை? அல்லது தன் கையில் எடுத்து வைத்துப் பாதுகாக்கிறானா?—இவ்வாறு கொண்ட ஐயத்தை இறைவனிடமே கேட்கிறார் அம்மையார்.