பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/588

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

578

‘நின்னுடைய இடப வாகனத்துக்கு எதை உவமையாகச் சொல்வது? அதனோடு பழகும் உனக்குத்தானே அது தெரியும்? எந்த ஒன்றைச் சொன்னால் நல்ல பொருத்தமாக இருக்குமோ அந்த ஓர் உவமையாக எனக்குச் சொல்.’

நின்ஏறு
உருமேறோ ஒன்றா உரை.

‘சிங்கம் என்று சில சமயம் சொல்லத் தோன்றுகிறது. அது சாந்தமாக இருக்கும்போது ஆனேறாகத் தோற்றமளிக்கிறது. இடிபோல முழங்கினால் இடியைப் போலக் காட்சியளிக்கிறது. இந்த மூன்றில் எது சரி? ஏதாவது ஒன்றுதான் சரியாக இருக்கும். அந்த ஒன்றை எனக்கு விடையாகச் சொல்' என்கிறார்.

நடக்கிற் படிநடுங்கும்;
நோக்கின் திசைவேம்;
இடிக்கின் உலகுஅனைத்தும்
ஏங்கும்;—அடுக்கல்
பொரும்ஏறோ? ஆனேறோ?
பொன்ஒப்பாய், நின்ஏறு
உருமேறோ ஒன்றாஉரை.

பொன்னயொத்த நிறமுடையவனே, நின்னுடைய வாகனமாகிய இடபம், நடந்தால் இந்த உலகமே நடுங்கும்; கோபத்தோடு பார்த்தால் திசைகளில் உள்ளவை வெந்து போகும்; இடி போல முழங்கினால் உலகிலுள்ள உயிர்கள் யாவும் அச்சத்தால் துன்பம் கொண்டு, என்ன ஆகுமோ என்ற ஏக்கத்தை அடையும்; ஆதலால் அது மலைகளோடு மோதி உடைக்கும் ஆண்சிங்கமோ? அல்லது ஆணேறுதானோ? அல்லது இடிதானோ? ஏதேனும் என் வினவுக்குரிய விடையை ஒன்றாகச் சொல்.’