பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/591

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

581.

கரைந்து பாடவேண்டும்; வாயாரப் பாடவேண்டும். இந்தப் பாடல்களைப் பாடி இறைவனைத் துதிக்கவேண்டும். இத்தகைய பாடல்கள் நாமே இயற்றிப் பாடுவது என்பது இயலாத காரியம். அப்படி வருந்திப் பாடவேண்டிய அவசியமே இல்லாமல், 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்’ என்ற எண்ணத்தால் அவரே பாடித் தந்திருக்கிறார். இந்த மாலையை மனங் கரைந்து இறைவனைப் பரவினால் அப்படிப் பரவுகிறவர்களுக்கு என்ன கிடைக்கும்?

இங்கே இருந்து பாடுபவர்களுக்கு இந்தப் பிறவிக்குப் பிறகு சிவலோக பதவியே கிடைக்கும். சிவலோகத்திற்குச் சென்றால் அங்கே நேரே சிவபிரானைத் தரிசிக்கலாம். அன்பர்களுக்குத் தெவிட்டாத அன்பு இருக்கும். குறையாத பக்தி அமைந்திருக்கும். அந்த அன்பினோடு இறைவனே அணுகிச் சென்று அவன் திருமுன் நின்று ஏத்தும் நிலை உண்டாகும்.

பரவுவார்
ஆராது அன்பினோடு அண்ணலைச் சென்று
ஏத்துவார்.

இயல்பாகவே அன்புடைய அவர்கள் இறைவனுடைய சாமீப்பியத்தை அடைந்தவுடன் அவர்களுடைய அன்பு பன்மடங்கு பெருகிவிடும். என்றும் நீங்காத பேரன்பு தோன்றும். இறைவனை இங்கே இருக்கும்போது ஏத்துவதையே இன்பமாகக் கொள்ளும் அவர்கள் சாமீப்பிய பதவியைப் பெறுவார்கள். அங்கும் என்றும் பேராமல் நிலைத்து நிற்கும் காதல் பிறந்த அவர்கள் என்றும் இன்பமே நிறைந்து நிற்பார்கள்.

பேராத காதல் பிறந்து.

இங்கே இறைவனை இந்த மாலையால் பாடிப் பரவியவர்கள் கைலாயத்தை அடைந்து இறைவனுடைய அணிமையில் இருக்கும் சாமீப்பியத்தைப் பெற்று, அங்கும் பெருங்காதலோடு நின்று ஏத்துவார்கள்.