இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நம் நாட்டில் எத்தனையோ விதமான பறவைகள் இருக்கின்றன. சில பறவைகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். மயில் எவ்வளவு அழகாக இருக்கிறது! சில பறவைகள் இனிமையாகப் பாடும். குயில் கூவும்போது கேட்க ஆனந்தமாக இல்லையா? இப்படி எத்தனையோ வகையான, பறவைகள் இருக்கின்றன. ஆக்காட்டி என்ற ஒரு பறவையை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? கிராமத்திலே இருப்பவர்கள் அதைப் பார்த்திருப்பார்கள். பட்டணத்திலே அதைப் பார்க்க முடியாது. ஆக்காட்டி நல்ல பறவை' அதற்குக் கால்கள் உயரமாக இருக்கும். அது நிலத்திலே உட்கார்ந்து இரை தேடிக் கொண்டிருக்கும்; பெரிய சத்த மிட்டுக் கூவும்.
ஆக்காட்டி பாறைகளிலே உள்ள பொந்துகளிலே கூடு அமைத்துக்கொண்டு அங்கே முட்டை வைக்கும். குஞ்சுகளை அன்போடு பாதுகாக்கும். இப்படிப்பட்ட ஆக்காட்டி ஒன்றின் சோகக் கதையைப் பற்றி ஒரு நாடோடிப் பாடல் உண்டு.