உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

103

மனோரஞ்சிதம் பாலா



ங்கமே தங்கம் என்று முடிகின்ற நாடோடிப் பாடலைக் கேட்டிருக்கிறோம். ஏதில்லலோ லேலோ என்றும், ஏலேலோ ஐலசா என்றும் முடிகின்ற பாடல்களையும் பார்த்தோம்.

மனோரஞ்சிதம் பாலா என்று முடிகின்ற பாடலும் உண்டு. கவர்ச்சியான இசையுடன் பாடுகின்றபோது இந்தப் பாடல்கள் நம் உள்ளத்தைக் கவர்கின்றன.

வயலிலே நாற்று நடவு நட்டுவிட்டு வீட்டை நோக்கித் திரும்புகிறார்கள் கூலிக்காரர்கள். நாளெல்லாம் வேலை செய்த அலுப்பு. ஆனால், அதை நினைத்துக்கொண்டிருந்தால் முடியுமா? ஊரும் பக்கத்தில் இல்லை. இரண்டு கல் தொலைவு நடக்கவேணும். அங்கே போனதும் அடுப்புப் பற்ற வைக்க வேணும். சோறு சமைக்க வேணும். பசியோடு வந்திருக்கும் கணவனுக்கும் குழந்தைகளுக்கும் சோறு போடணும். ஆகையால் நடவு நட்டுத் திரும்பும் பெண்கள் சலிப்பைப் பாராமல் வேகமாக நடக்க விரும்புகிறார்கள்.

வயலிலே வரப்பு வெட்டிச் சீர்திருத்த வந்திருந்த ஆண்கள் சிலரும் இந்தப் பெண்கள் கூட்டத்தோடு வீடு