பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒன்று பத்து நூறு

111



ஆளுல் ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசையாக உண்மையிலேயே எண்ணிப் பாடி விளையாடுகிற விளையாட்டுக்களும் உண்டு. கும்மிப் பாட்டு நல்ல உதாரணம்.

கும்மிப் பாடல்கள் ஆயிரக்கணக்கிலே இருக்கின்றன என்பது நமக்குத் தெரியும். அவற்றிலே பல வகைகளும் உண்டு. ஒரு சில கும்மிப் பாடல்கள் இப்படிக் கணக்கெண்ணும் வகையைச் சேர்ந்தவை: பாடுவதற்கும் எளிமையானவை.

ஒரு கல்லை எடுத்து வீசினர்களாம். அது ஆகாயத்தில் கொஞ்ச தூரம் சென்று பிறகு வேகம் குறைந்து சோர்வுற்று நிலத்தில் விழுகிறது. ஓர் ஆயிரம் கிளிகள் அந்தக் கல் வீச்சால் எழுகின்றன; அந்தரத்தில் நின்று பாடுகின்றன. அந்தக் கிளிகள் ஏகாந்தம் பேசுகின்றனவாம்.

பிறகு இரண்டு கல் வீசுகிருர்கள். அப்பொழுது இரண்டாயிரம் கிளிகள் எழுகின்றன. ஆகாயத்தில் நின்று ஏகாந்தம் பேசுகின்றன.

இப்படியே மூன்று கல் வீசும்போதும் நடக்கிறது. நான்கு கல், ஐந்து கல் என்று பாட்டு வரிசையாகத் தொடர்கிறது. இந்தப் பாடலைப் பாடிக்கொண்டு எவ்வளவு நேரம் வேண்டுமானலும் கும்மியடிக்கலாமல்லவா? பாட்டைப் பார்ப்போம்:

ஒரு கல்லு வீசவே ஒரு கல்லும் சோரவே
ஒண்ணு லாயிரம் கிளிகள் வந்து-ஆடவே கிளி பாடவே
ஆடவே கிளி பாடவே அம்பலத்தில் நிற்கவே
அம்பலத்தில் நிற்கும்.கிளி ஆகாயம் பறக்கவே
ஆகாயம் பறக்கும் கிளி ஏகாந்தம் பேசவே
ரண்டு கல்லு வீசவே ரண்டு கல்லும் சோரவே
ரண்டாலாயிரம் கிளிகள் வந்து-ஆடவே கிளிபாடவே