வாழ்க்கையிலே எத்தனையோ சிரமங்கள் ஏற்படுகின்றன. இந்த வாழ்க்கையை ஒரு வறண்ட பாலை என்று கூடச் சொல்லுவார்கள். பாலையிலே ஆங்காங்கே தோன்றுகிற பசுமையைப்போல இன்பங்களும் இடையிடையே இருந்தாலும் துன்பங்கள்தாம் அதிகம் என்று பல பேர் சாதிப்பார்கள். வாழ்க்கை இன்பமயமானதுதான். ஆனால், மனிதன் தனது சுயநலத்தாலும், குறுகிய நோக்கத்தாலும் அதைத் துன்பம் நிறைந்ததாகச் செய்துவிட்டான் என்று வேறு சிலர் கூறுவார்கள்.
வாழ்க்கையில் பலவிதமான சோதனைகளும், இடர்ப் பாடுகளும் இல்லாவிட்டால் மனிதன் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைத்துத் தன் வாழ்க்கையின் லட்சியத்தை அடையமாட்டான்; ஆதலால் இந்தத் துன்பங்கள் அவனுக்கு நல்லதே என்று சிலர் தத்துவ ஆராய்ச்சியில் இறங்குவார்கள். பற்றற்ற நிலையிலே மனிதன் தன் கடமைகளைச் செய்துகொண்டிருந்தால் அவனை எவ்விதமான துன்பமும் அணுகாது என்று உபதேசம் செய்பவர்களும் உண்டு.