பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/143

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

காற்றில் வந்த கவிதை


எளிய மக்களுக்குத் தங்கள் துன்பங்களை மறந்து மன அமைதி பெறுவதற்கு ஒரு நல்ல வழி தெரிந்திருக்கிறது. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழி நம் நாட்டிலே தோன்றியிருக்கிறது. கோயில் மனிதனுக்குச் சாந்தியளிக்கும் புனிதமான நிலையம் என்று கண்டிருக்கிறார்கள்.

மக்கள் கோயிலுக்குச் சென்று இறைவன் மேல் தங்கள் வாழ்க்கைச் சுமையையெல்லாம் போட்டுவிட்டு ஆறுதல் பெறுகிறார்கள். இறைவன் கருணைக் கடலாக விளங்குகிறான் என்ற நம்பிக்கையிலே அவர்கள் அவனுடைய சந்நதியிலே புதியதோர் வலிமையும், உற்சாகமும் அடைகிறார்கள்.

இறைவன் எங்கும் நிறைந்தவன். இந்த உண்மையை எல்லோரும் பரிசோதித்து அறிந்து கொள்ளவில்லை. அது எல்லோராலும் முடியக்கூடியதல்ல. ஆனல், பல சான்றோர்கள் கூறிய மொழிகளிலிருந்து மக்கள் அதை நம்புகிறார்கள். அங்கு இங்கு என்று குறிப்பிட்டுக் கூற முடியாதபடி அவன் எங்கும் பிரகாசமாக இருக்கிறான். அவன் வெளியிலே இருக்கிறான்: உள்ளத்திலும் இருக்கிறான். ஆதலால் அவனுக்குத் தெரியாததொன்றுமில்லை. எனவே, அவனிடத்தில் எதையும் மறைக்க முடியாது.

உள்ளத்திலே மறைந்து கிடக்கின்ற எத்தனையோ உணர்ச்சிகளால் மக்கள் பாதிக்கப்பட்டு அல்லல்படுகிறார்கள். அந்த உணர்ச்சிகளைப்பற்றியெல்லாம் வெளிப்படையாக யாரிடத்திலாவது கூறிவிட்டால் ஒரளவு ஆறுதல் கிடைக்கும் என்று மனத் தத்துவர்கள் கண்டிருக்கிறார்கள். ஆனால், உள்ளத்திலே தோன்றுகிற உணர்ச்சிகளையெல்லாம் வெளியிலே சொல்ல முடிகிறதா? சொன்னால் இழிவு வந்து விடாதா? உள்ளத்தைத் திறந்து காண்பிப்பது என்பது அவ்வளவு எளிய காரியமல்ல.

இறைவனிடத்திலே உள்ளத்தைத் திறந்து காண்பிப்பது எளிது. அவனுக்குத்தான் எல்லாம் தெரியுமே! ஆதலால்