மழைப் பாட்டு
17
விரைவில் மழை பெய்யும் என்பது கிராம மக்களின் நம்பிக்கை.
"மழை சீக்கிரம் வருமா?" என்று எல்லோரும் ஆவலோடு கேட்பார்கள்.
"குறி கேட்டு வந்திருக்கிறேன். மழை நிச்சயம் பெய்யும். குறி சொல்லாவிட்டால் நான் இங்கே மழைப் பாட்டுப் பாடிக்கொண்டு வருவேனா?’ என்பான் மழைப் பாட்டுக்காரன்.
குடியானவர்கள் மகிழ்ச்சியோடு அந்தப் பாட்டுக் காரனுக்குப் பலவகையான தானியங்களைப் பிச்சையாகப் போடுவார்கள். அவனுக்கு நல்ல வரும்படி.
வழக்கமாக மழைப் பாட்டுக்காரன் தனியாக வர மாட்டான். கூடத் தன் மனைவியையும் கூட்டி வருவான். இருவருமாகச் சேர்ந்துதான் பாடுவார்கள்.
மழை எப்படிப் பெய்யும் என்பதை அவர்களுடைய பாட்டே அழகாகச் சொல்லும். ஊசி போல மின்னி மின்னி மழை பெய்யுமாம். ஊர் செழிக்கவும், பட்டணம் செழிக்கவும், காடு செழிக்கவும் மழை பெய்யுமாம். இதுவரை பெய்யாத அளவுக்குப் பெரிய மழை பெய்யுமாம்.
பெய்யுமாலம்மா பெய்யுமாலோ
பேயா மழை பெய்யுமாலோ
நல்ல மழை பெய்யுமாலம்மா
நாடு செழிக்கப் பெய்யுமாலோ
ஊசி போல மின்னி மின்னி
ஊர் செழிக்கப் பெய்யுமாலோ
காசு போலே மின்னி மின்னிக்
காடு செழிக்கப் பெய்யுமாலோ
2