உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

காற்றில் வந்த கவிதை

வெய்யில் நேரத்திலே பயிர்களுக்குத் தண்ணிர் சரியாகப் பாயாது. அது மட்டுமல்ல. வெய்யில் நேரத்தில் பாய்கிற தண்ணிர் சூடேறிவிடும். நிலமும் காய்ந்திருக்கும். அதனால் அந்த நேரத்தில் தண்ணீர் பாய்ச்சுவது பயிருக்கு அவ்வளவு நல்லதல்ல.

அதிகாலையில் புறப்பட்டு வேலைக்கு வந்த உழவன் தனது காலை உணவை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறான். உடலுழைப்பால் அவனுக்கு நல்ல பசி எடுத்திருக்கிறது: அந்தச் சமயத்திலே கஞ்சியென்றாலும் அமுதமாக இருக்கும்.

அவனுக்கு வயிற்றுப் பசியைவிட வேறொரு பசி அதிகமாக இருக்கிறது. தனது அன்பையெல்லாம் கொள்ளை கொண்டிருக்கும் தன் மனைவியை அவன் பிரிந்து வந்து வேலை செய்துகொண்டிருக்கிறான். அவளுடைய இனிய முகத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை மேலோங்குகிறது. அன்புக்குப் பாத்திரமானவர்களை எத்தனை தடவை பார்த்தாலும்.ஆசை அடங்காது. அந்த ஆசை அவன் உள்ளத்தைக் கிள்ளுகிறது) வயிற்றைக் கிள்ளும் பசியைவிட இது அதிகமாக இருக்கிறது.

அதானால், அவள் வந்தவுடன் அவளிடம் கோபித்துக் கொள்ளுகிறான். கஞ்சி கொண்டுவர நேரமாகிவிட்டதே என்று கோபமல்ல. அவளைப் பார்க்க நேரமாகி விட்டதே என்று கோபம். அன்புக் கோபம்!

கஞ்சி கொண்டுவர இவ்வளவு தாமதமா என்று அவன் தொடங்கினன். அதைக் கேட்டதும் அவள் மனம் படாத பாடு பட்டிருக்கும். வயிற்றுப் பசியால் அத்தான் வாடிப் போயிருக்கிறார் என்று அவள் வருந்தியிருப்பாள். ஆனால், அவனுடைய அடுத்த கேள்வி அவள் உள்ளத்திலே மகிழ்ச்சித் தேனை வார்த்திருக்கும். உன்னைப் பார்க்க எனக்கு இவ்வளவு நேரமாகிவிட்டதே என்கிறான் அவன். அதுதான் அவனுக்குக் கோபம். அந்தக் கோபத்தை அவள் முழுமனதோடு ஆமோதித்திருப்பாள் பாட்டைப் பார்க்கலாம்,