பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

65

அவன் துறவுக் கோலம் சரியாகத்தான் பூண்டிருக்கிருன். உச்சியிலே சடையிருக்கிறது. நெற்றியிலே திருநீறு இருக்கிறது. முருகனிடத்திலே மாருத பக்தி வேண்டும் என்பதை எப்பொழுதும் நினைவு படுத்துவதற்காக அவன் முருகனுடைக படையான வேலையும் கையிலே வைத்திருக்கிறான்.

இருந்தாலும் அவனுடைய மனம் ஒரு வழியில் நிற்ப தில்லை. மனம் பொல்லாதது. அதை அடக்குவது அவ்வளவு எளிதான காரியமல்ல. அடிக்கடி அது நெறியல்லா நெறியினில் போக ஆசைப்படுகிறது. இதை அந்தத் துறவி தனது பாடலிலே கூறுகிருன்.

உச்சியிலே சடையிருக்க
உள்ளங்கையில் வேலிருக்க
நெற்றியிலே நீறிருக்கக்-கந்தையா என்
நினைவுதப்பிப் போவதென்னே

மனத்தைக் கட்டி வைத்து நல்ல நெறியிலே அதைப் போகச் செய்வதற்குக் கடவுளின் அருள் வேண்டும். அவனுடை அருளில்லாமல் மனத்தை அடக்க இயலாது. பழநி மலைப் பெருமான் கடைக் கண் பாலித்தால் மனம் கட்டுப்படும். இதைத்தான் முருகனிடத்தில் அந்தத் துறவி வேண்டி மலையேறுகிறான்.