பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

காற்றில் வந்த கவிதை


இதிலே இல்லை. ஆனால், எல்லோரும் கூடை முறங் கட்ட முடியுமா? ஏதோ ஒரு சிலர்தான் இந்தத் தொழிலைச் செய்யலாம்.

மற்றவர்கள் வேறு வேலை தேடவேண்டும். மலைச் சாரலிலே உள்ள காட்டிற்குச் சென்று விறகு கொண்டு வந்து விற்றுச் சிலபேர் பிழைக்கிறார்கள். சுதந்திரமான வேலைதான் இது. ஆனால், இதிலும் எத்தனையோ சிரமங்கள் உண்டு.

விறகு வெட்டிக் கற்றை கற்றையாகக் கட்டித் தலையிலே சுமந்து வந்து பக்கத்திலே உள்ள ஊர்களிலோ பட்டணங்களிலோ விற்கவேண்டும். வெய்யிலென்று பார்க்க முடியாது: மழையென்று பார்க்க முடியாது. கல்லிலும் முள்ளிலும் நடக்க வேண்டிவரும். அதற்கெல்லாம் துணிந்துதான் இந்த வேலையை மேற்கொள்ள வேண்டும்.

விறகு வெட்டிப் பிழைக்கும் பெண்கள் பாடுவதாக ஒரு பாட்டுண்டு. அது அவர்களுடைய துன்பங்களையே எடுத்துக் கூறுகின்றது. துன்பங்களைக் கூறினாலும் அதைப் பாடுகின்ற போது கொஞ்சம் அலுப்புக் குறையத்தான் செய்கிறது. அதற்காகவே அப்பாடலைப் பாடுகிறார்கள். கேள்வியும் பதிலுமாகப் பாடல் வருகிறது.

வேகாத வெயிலுக்குள்ளே-ஏதில்லலோலேலோ
விறகெடுக்கப் போற பெண்ணே-ஏதில்லலோலேலோ
காலுனக்குப் பொசுக்கலையோ-ஏதில்லலோலேலோ
கத்தாளை முள் குத்தலையோ-ஏதில்லலோலேலோ

காலுப் பொசுக்கினாலும்-ஏதில்லலோலேலோ
கத்தாளைமுள்ளுக் குத்தினாலும்-ஏதில்லலோலேலோ
காலக் கொடுமையாலே-ஏதில்லலோலேலோ
கஞ்சிக்கே கஸ்டமாச்சே-ஏதில்லலோலேலோ