பக்கம்:காலச்சக்கரம்-பொங்கல் பரிசு.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

திரு. ராஜாஜி அவர்கள் “காரணம் தெரியாது; நான் பித்தன் மேல் மோகம் கொண்டுவிட்டேன்; அவ்வளவுதான் சொல்லலாம்,” என்று மகிழ்ச்சியைத் தெரிவித்திருந்தார்.

‘பித்தன்’ கழகத்திலே அவ்வப்போது கூட்டங்கள் நடைபெறும். நாங்கள் வசித்து வந்த மாணவர் விடுதியே அதிரும்படியாகக் காரசாரமான விவாதங்கள் இருக்கும்: இப்படிபட்ட ஒரு கூட்டத்திலே கிறிஸ்துமஸ் வாழ்த்து மடல்களைப்போலப் பொங்கல் விழாவுக்கும் நாம் பொங்கல் வாழ்த்து அனுப்பவேண்டும் என்று நானும் வேறு சிலரும் வற்புறுத்தினோம். அக்காலத்தில் பொங்கல் வாழ்த்து அனுப்பும் வழக்கம் பழக்கத்திற்கு வரவில்லை. எங்களில் ஒரு சில தீவிரவாதிகள், “நாம் எதற்காக மேல்நாட்டாரின் வழக்கத்தைப் பின்பற்ற வேண்டும், அது அடிமை மனப்பான்மையின் அறிகுறி” என்று பேசினர், வர வர சூடு அதிகமாய் விட்டது.

இறுதியில் இதைக் கழகத்தின் கொள்கையாகக் கொள்ள வேண்டியதில்லை என்றும், விருப்பமுடையவர்கள் பொங்கல் வாழ்த்து சொந்த முறையில் அனுப்பலாம் என்றும் முடிவுக்கு வந்தோம். பொங்கல் வாழ்த்து அனுப்ப வேண்டும் என்று வாதித்த கட்சியைச் சேர்ந்தவன் நான். ஆனால் அதை நம் நாட்டிற்கு ஏற்பப் புதுமுறையில் செய்யவேண்டும் என்பது என் விருப்பம்.

கொங்கு நாட்டில் விவசாயப் பண்ணைகளின் மத்தியில் அமைந்தது எங்கள் ஊர். அங்கிருந்து நல்ல அகலமான குருத்துப் பனை ஓலைகளைக் கொண்ர்ந்து அவற்றை அழகாக நறுக்கி வண்ண மைகளைக் கொண்டு அழகு செய்து வாழ்த்து எழுதி நாங்கள் அனுப்பினோம். திரு. வி. க., பேராசிரியர் ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி, அப்போது எங்களுக்குத் தமிழ் ஆசிரியராக இருந்த கா. நமச்சிவாய முதலியார் முதலிய பலருக்கு இவை அனுப்பப்பட்டன. இந்த வழக்கம்