பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 15 தலைசாயுமுன் தன்னாவியை விடுத்து, அவனுக்கு முன் பரலோகம் சென்று அவனை வரவேற்பார்கள். இந்தக் கற்பு நெறியில் இருந்து அவள் மாறினாலோ, அவளுக்கு மரணத்தைத் தழுவுவதைத் தவிர வேறு ஒரு கதியும் இல்லை. சமுதாயம் அவளைப் புறக்கணிக்கும்; பெற்றோரும், உற்றாரும், மற்றோரும் அவளை ஏறெடுத்தும் பாரார். இப்படியாகக் கற்பு நெறியின் கூரிய வாள் முனையில் பெண்ணின் சகல மலர்ச்சிகளும் தொங்கிக் கொண் டிருக்கின்றன. ஆணும் பெண்ணும் இணைந்து, மக்களைப் பெருக்கும் ஒரே செயலாற்றலில், பெண்ணே கூடுதல் பங்கையும் பொறுப்பையும் ஏற்கிறாள். பெண்ணின் உடல்கூறியல், இந்தச் சிறப்பான அவளுடைய பொறுப்புக்கு ஏற்புடையதாக அமைந்திருக்கிறது. தன்னலம் கருதாத் தியாக இயல்பும், நோவு பொறுக்கும்போது அன்பு வடிவாகக் கனியும் தன்மையும் பாசமும், கருணையும் அவர்களுடைய இயற் பண்புகளாக அப்போது முழுமை பெறுகின்றன. ஆணோ, திருமண பந்தத்தினால், இத்தகைய உடலியல் இராசாயன மாற்றங்களுக்கு இயல்பாக உட்படுவதில்லை. இன்பத்தைப் பெறுகிறான். பின்னர் மக்கட்பேற்றின் பயனையும் எய்துகிறான். இவன் எந்த விலையும் கொடுக்காமலேயே இந்த இரு பயன்களையும் பெண்ணின் வாயிலாகப் பெற்று விடுகிறான். இதனால், ஆணுக்கு இன்பம் மட்டும் இலட்சியமாகப் பழகிவிடுகிறது; பெண்ணைப் போகப் பொருளாகக் கொள்ளும் ஒரு பங்கும் மேவுகிறது. இது காலப் போக்கில், அவளுடைய குணாம்சங்களையே அணி, பணிகள், ஆடைகள் மற்றும் உடமைப் பொருள்களால் குழைவாக்கி, தன் அச்சுக்கேற்ப ஒரு வடிவமைப்பையும் அவளுக்கு இசைத்துவிட ஏதுவாக, வாழ்க்கை நாகரிகம் வழி வகுத்திருக்கிறது.