பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 191 ஆயிரமாயிரமாகக் கல்லூரிகளில் கல்வி கற்றும் தொழில் செய்தும், சமத்துவம் சமத்துவம் என்று முழங்கியும், இவர்கள் அறிவுக் கண்கள், இரண்டாம் பட்ச மயக்கத்தையே சொர்க்கம் என்று எண்ணி மயங்கிக் கொண்டிருக்கிறது. நான் ஏன் இந்தச் செய்கைகளைச் செய்ய வேண்டும் என்று கேட்கும் அறிவு சுத்தமாக மூடிக் கிடக்கிறது. வரதட்சணைக் கொலைகள், குரூரக் கற்பழிப்புக்கள் ஒழிக்கப்பட்டது என்று நினைத்திருந்த ‘ஸதி' எரிப்பின் மீட்சிகள், பெண் சிசுக் கொலைகள், பெண் கருவழிப்புக்கள் எல்லாம், ஒரு பக்கம் ஓங்கி வரும் பெண் எழுச்சிக் கருத்துக்களை, ஒங்கி அடித்து அமுக்கும் ஆதிக்கத்தின் எதிரொலிகளே. ஆனால் 'காலந்தோறும் வரலாறாகத் தொடர்ந்து வந்திருக்கும் அடக்குமுறை ஆதிக்கக் கூறுகள், சமயப் போர்வை போர்த்தாலும், சாத்திரப் போர்வை போர்த்தாலும், அது கிழிபட்டு வீழும் நாள் அருகாமையிலேயே இருக்கின்றதென்று நம்புவோம். புதிய சமுதாய சமத்து வத்துக்குப் பெண்ணே வழியமைப்பாள்.