பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. வேதத்தில் என்ன இருக்கிறது? ‘ருக்வேத காலத்துப் பெண்கள்’ என்ற நூலுக்கு முன்னுரை எழுதுகையில் இந்திய தத்துவப் பேரறிஞர் டாக்டர் ராதாகிருஷ்ணன், திருமணம் என்ற ஒர் ஒழுங்குமுறையும் அதன் பல்வேறு கூறுகளும் வராலற்று ரீதியான ஆய்வில் அந்தந்தக் காலத்துச் சமுதாயப் பழக்க வழக்கங்களைச் சார்ந்து அமைவதாகத் தெளிவுபடுத்துகிறார். “திருமணம் என்பது வெறும் இயல்பூக்க விவகாரமன்று. ஆனால் இயல்பூக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நிறுவப் பெற்ற ஒர் ஒழுங்குமுறை. இருவேறு உள்ளங்களின் ஆளுமை ஆற்றல்கள் ஒருவருக்கொருவர் என்று பிணையும் அநுபவங்களில் மகிழ்ச்சியும் காதலும், துன்பமும் உடன் பாடுகளும் துயரங்களும் அடங்கியவை” என்று அவர் குறிப்பிடுகிறார். இந்தக் குறிப்பில் தற்கொண்டான்' என்று ஒருவனிடம் பெண் தனது தனித்தன்மையை மலர வைக்கும் அறிவு, ஆற்றல், திறமை ஆகிய எல்லா மேன்மைகளையும் கரைத்துத் தன்னை முற்றிலுமாக இழந்துவிட வேண்டும் என்ற கோட்பாட்டின் இைழகூட ஊடாடி இருக்கவில்லை. வேதங்கள் தொகுக்கப்பட்ட காலத்தை ஆராய்ச்சியாளர் கி.மு. 1300-ம் ஆண்டிலிருந்து 900-ம் ஆண்டு வரைக்குட்பட்ட காலமாக ஏறக்குறைய வரையறுக்கின்றனர். பண்டைய ஆரிய சமுதாயத்தைப் பற்றிய தகவல்களை, முதன்முதலாகக் கொடுக்கும் இலக்கியச் சான்றுகளை இந்த வேதப் பாடல்களின் வாயிலாகவே அறிய முடிகிறது. இவற்றுள், 1028 பாடல்களை உள்ளடக்கியதும் மிகவும் புராதனமாக விளங்குவதுமாகிய ருக்வேதமே நமக்கு அக்கால வாழ்வைப் பற்றிய ஏராளமான சான்றுகளைத் தருகிறது.