பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 காலந்தோறும் பெண் இந்நாட்டில் எழுத்தறிவு தோன்றிப் பரவலாகப் பயன்பட வந்துவிட்ட காலங்களில்கூட, வேதங்கள் மட்டும் குரு சீட பரம்பரையாய், எழுதாக்கிளவியாய், மானிடர் நினைவுக் கருவூலங்களில் இருந்து ஒலி மலர்ச் சரங்களாக எழும்பி துழலின் புனிதத்துவத்தையும் மக்களின் துய உணர்வுகளையும் பாதுகாக்கும் தெய்வீகக் கவசமாகவே கருதப்பட்டு வந்திருக்கிறது. ஆயிரமாயிரமான இப்பாடல்களை இசைத்துப் பாதுகாப்பதற்கென்றே ஆரிய சமுதாயம் தம்முள் ஒரு சிறு பிரிவினரை நெறிப்படுத்தி, அவர்களுக்கு மிக உயர்ந்த சமுதாயப் பொறுப்புக்கான மதிப்பை அளித்தனர். இந்தப் பாடல்கள், இன்றும் இந்து சமய-சமூகச் சடங்குகளில், இசைக்கப்படுகின்றன. எனவே, வேத கால சம்பிரதாயங்கள், புதையுண்ட வரலாற்றுச் சிதிலங்களாக உயிரிழந்து போய்விடாமல் இன்றளவும் தொடர்ந்து வரும் சமுதாயப் பரம்பரையின் சின்னங்களாகக் காப்பாற்றப்பட்டு வந்திருக்கின்றன என்றால் தவறில்லை. இவற்றுள் மிக முக்கியமான திருமணச் சடங்குதான். ருக் வேதம் விவரிக்கும் ஒளித்தேவனின் மகளுடைய திருமணச் சடங்கை ஆதாரமாக்கி, அந்த மந்திரங்களை ஒட்டியே இன்றளவும் இந்துத் திருமணங்கள் நெறிப்படுத்தப் பட்டிருக்கின்றன. ஆனால், இன்றைய, காசி யாத்திரை, சவரன் தாலி, வெள்ளி மற்றும் உலோகப் பாத்திரங்கள், ரிசப்ஷன், கச்சேரி, பட்டுச் சேலைகள், ஹனிமூன், பயணச்சீட்டு என்ற குவியலிடையே, புரோகிதர் கண்களை மூடிக்கொண்டு சொல்லும் சில மந்திரங்களிடையேதான் அந்த நெறியைத் தேட வேண்டும். மந்திரங்களின் உயிர்த்துவம், ஒளி பெருக்கியில் கேட்கும் நாடாப் பதிவாக வாணிப சினிமா ஒலிகளிடையே தொக்கிக்கொண்டு ஊசலாடுகிறது. உலகாயதம் விழுங்கிவிட்ட எச்சங்களாகிய புரோகிதங்களுக்கு, அம்மந்திரங்களின் ஆதியும் தெரியாது. அந்தமும் தெரியாது.