பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 காலந்தோறும் பெண் இதே கால கட்டத்தில், இந்தியாவில் வாழ்ந்த ஆதி குடியினர், சீரான பெண்கள் படையே வைத்திருந்ததாகவும் எண்ணிக்கையில் மிக அதிகமான இப்போராளிகளுடன் போர் புரிந்தாக வேண்டிய கட்டாயம், வந்தவருக்கு ஏற்பட்டதென்றும் விவரங்கள் காணக் கிடைக்கின்றன. அக்காலத்தில், பொதுவாக, உலகியல் கல்வி, ஆன்மிக அறிவுக்கான தேடல், போர்க்கலை ஆகிய எல்லாப் பிரிவுகளுமே பெண்ணுக்கு உகந்ததல்லாததாக மறுக்கப் பட்டிருக்கவில்லை. அவளுக்குக் கல்வி-கேள்விவாழ்க்கை இன்பம் என்ற உரிமைகள் பூரணமாக இருந்ததென்றே கூறலாம். 'மதுரத் தேமொழி மங்கையருண்மைதேர் மாதவப் பெரியோருடனொப்புற்றே முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசி முறைமை” என்று பாரதி குறிப்பிட்டிருக்கும் வழக்கு இருந்திருக்கிறது. கல்வியும் நல்லறிவும் ஆடல் பாடற் கலைகளுடனும் இசைந்திருந்தது: ஆடற்கலையும், பாடற்கலையும் ஒரு பெண்ணின் இயல்பான குடும்ப வாழ்க்கைக்கு இசையாத நிலையில், விலை மகள்’ என்ற வருக்கத்தாரைத் தோற்றுவித்து அவர்களுக்கு மட்டுமே உரிய கலைகளாக ஒதுக்கப்பட்டிருக்க வில்லை. மாலை நேரங்களில், ஒத்த இளைஞர்களுடன் உல்லாசமாக, ஆடல்பாடல்கள், அறிவுக்கும் மனதுக்கும் உற்சாகமூட்டும் விநோதக் களியாட்டங்கள் என்ற வகையில் மாந்தர் கூடும் பொழுதுபோக்குக் கூடங்கள்-சமானங்கள் (சமாஜங்கள்) பெண்கள் பழகுவதற்கு உரிய இடங்களாக இருந்தன. இவை அனைத்துமே, ஏழு வயசில் அவள் அறிவுக் கண்ணை பூவாலும் பொன்னாலும் பட்டாலும் குருடாக்கித் திருமண பந்தத்தில் இறுக்கிவிட்ட நிலையில், பயனற்றுப் போயின.